V-3 விமர்சனம்

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார்(சிவகாமி), பாவனா(விந்தியா), எஸ்தர் அனில்(விஜி), ஆடுகளம் நரேன்(வேலாயுதம்), சந்திரகுமார்(லோகோ), பொன்முடி (விஸ்வநாதன்), ஜெய்குமார், ஷீபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைப்படி,

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வேலாயுதம்(ஆடுகளம் நரேன்) ஒரு பேப்பர் ஏஜென்ட். இவருக்கு இரண்டு மகள்கள் விந்தியா(பாவனா) மற்றும் விஜி(எஸ்தர் அனில்).

ஒரு நாள் வெளியூர் சென்று நேர்முக தேர்வை முடித்துவிட்டு கோயமுத்தூர் அருகேயிருக்கும் போத்தனூர் ரயில் நிலையம் வந்து அங்கேயிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இரவில் வீடு திரும்பும் விந்தியாவை, ஐந்து பேர் சேர்ந்த ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்கிறது.

இந்தக் கொடூரச் செயலை செய்தவர்கள் இவர்கள்தான் என்று 5 பேரை போலீஸார் கைது செய்து, அன்றைய இரவிலேயே என்கவுண்ட்டரில் அவர்களை கொலை செய்கிறது.

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் அப்பாவிகள் என்றும், அவர்கள் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை. அவர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் கதறி அழுகிறார்கள். மீடியாக்களுக்கு பேட்டியளிக்கிறார்கள்.

அதே சமயம் இந்த என்கவுண்ட்டர் போலியாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம், இந்த என்கவுண்ட்டர் பற்றி விசாரிக்க மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகாமி(வரலட்சுமி சரத்குமார்)யின் தலைமையில் ஒரு குழுவை நியமிக்கிறது.


பாலியல் பலாத்காரம் மற்றும் என்கவுண்ட்டர் ஆகிய இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் சிவகாமி IAS தலைமையிலான குழு விசாரணை நடத்துகிறது. அப்போது இந்த என்கவுண்ட்டர் குறித்த பல உண்மைகள் வெளிப்படுகின்றன. உண்மையில் குற்றம் செய்தவர்கள் இவர்கள்தானா..? இது போலி என்கவுண்ட்டரா..? உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? என்பதுதான் இந்த ‘V-3’ படத்தின் திரைக்கதை.

சிவகாமியாக நடித்திருக்கும் வரலட்சுமி ஏற்கெனவே மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றிய ஊரில் முஸ்லீம் மக்களுக்கு உதவி செய்யப் போய் அது அரசியல் கொலைகளாகி, அதற்கான தண்டனை பதவியாகத்தான் தற்போது எழுதுபொருள் அச்சகத்தின் கமிஷனராகப் பணியில் உள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்குத் தலைமை தாங்க இவரை அழைத்ததும் முதலில் “முடியாது” என்கிறார். பின்பு தான் செய்த நல்லவைகளை என்னவென்றே தெரியாமல் கூச்சலிடும் மக்களின் எதிர்ப்பினால் கோபப்பட்டு, இந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்.

முட்டைகள் தன் மீது வீசப்பட்ட நிலையிலும் இரண்டில் ஒன்றினை பார்த்துவிடுவோம் என்ற மன நிலையில் இந்தப் பொறுப்பை ஏற்க முடிவு செய்யும் தருணத்தில் அவரது நடிப்பு அழகு.. அற்புதம்..!

மற்றபடி படம் முழுவதும் இறுக்கமான முகத்துடன் வலம் வந்திருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேசும்போதாவது அவர் இயல்பு நிலைமையில் இருந்திருக்கலாம்.

‘ஆடுகளம்’ நரேன் யாருக்குமே வாய்ப்பு தராமல், தானே நடித்து முடித்து அந்தந்த காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறார். ஒரு நடுத்தர வர்க்க தந்தையின் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த இரவு நேரத்தில் தனது ஆசை மகளின் நிலையை கண்டு கதறியழும் காட்சியில் நம்மையும் உருக வைத்திருக்கிறார். வரலட்சுமியிடம் பேசும்போதும், கடைசி விசாரணையின்போதும் தனது உணர்ச்சி ததும்பிய நடிப்பின் மூலம் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார் ஆடுகளம் நரேன்.

பாதிக்கப்பட்ட பெண்ணான விந்தியாவாக நடித்திருக்கும் பாவனா கிளைமாக்ஸில் கதறியழும்போதும், தன்னை துன்புறுத்தியவர்களை “அண்ணன்” என்று அழைத்து அவர் பேசும் வசனங்களும், சோகத்தைக் கூட்டுகின்றன.

இவரது தங்கையான எஸ்தர் அனிலும் தனது பங்குக்கு பாசமிக்க தங்கையின் நடிப்பைக் காண்பித்திருக்கிறார். அஸிஸ்டெண்ட் கமிஷனர் பொன்முடி கடைசியாக தன் தவறை ஒப்புக் கொள்ளும்விதம் நம்ப முடியாதுதான். ஆனால் நம்புவதைப் போல படமாக்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சிவ பிரபு இரவு நேரக் காட்சிகளை படத்தின் தன்மைக்கேற்ப படமாக்கியுள்ளார். என்கவுண்ட்டர் காட்சியையும், போலீஸை பார்த்தவுடன் இளைஞர் தப்பியோடுவதையும் பரபரப்பு மிகுந்த வகையில் படமாக்கியிருக்கிறார்.

ஆலன் செபாஸ்டியனின் பின்னணி இசை சற்று இரைச்சலை கொடுத்திருக்கிறது. மிரட்டல் செல்வா ஆக்சனான ஆக்சன் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ஹைதராபாத் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை எழுதி, அதில் கொஞ்சம் அரசியலை புகுத்தி இந்தக் காலத்திற்கேற்றவாறு படத்தை உருவாக்கியிருந்தாலும், படத்தின் திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளை இயக்குநர் கவனிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

எம்.எல்.ஏ.வும், முதல் அமைச்சரும் பேசித்தான் இந்த என்கவுண்ட்டர் நடந்ததை போன் பேச்சு மூலம் கண்டறிந்ததாக வரலட்சுமி சொல்வது எப்படி என்று தெரியவில்லை.

இதில் முதல் அமைச்சரே சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றால் நிஜத்தில் கதையே மாறியிருக்கும். சிவகாமியே கொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது விசாரணையே நடக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

அஸிஸ்டெண்ட் கமிஷனர் இதுபோல் உடனடியாக தனது தவறை ஒப்புக் கொள்வார் என்பதை இந்தியாவில் எந்தவொரு மனிதனும் நம்ப மாட்டான். அடுத்த சில நிமிடங்களிலேயே அஸிஸ்டெண்ட் கமிஷனர் கைது செய்யப்படுவதெல்லாம் காதில் பூ சுற்றும் கதைதான். இது நடக்க சாத்தியமே இல்லை.

இதில் தேசிய மனித உரிமை ஆணையத்தை சூப்பர் பவர் உள்ள நீதிமன்றம்போல காட்டியுள்ளதும் தவறானது.

சிவகாமி தலைமையிலான குழு தனது அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த பின்புதான் அந்த ஆணையம் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை வெளியில் சொல்லும்.

அவர்களும் சிபிஐ விசாரணைக்கோ அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுக்கோ சிபாரிசு செய்யலாமே தவிர வேறு எதுவும் இந்த வழக்கில் அவர்களால் செய்ய முடியாது. இதை இயக்குநர் நன்கு விசாரித்து எழுதியிருக்கலாமே..?!

மேலும் முன்பே சொன்ன அந்த ஹைதராபாத் போலி என்கவுண்ட்டர் வழக்கில்கூட இன்னமும் அந்தக் காவல்துறையினரிடம் விசாரணைதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கே வரவில்லை என்பதுதான் கொடுமையான விஷயம்.

மேலும் இயக்குநர் இந்தப் படத்தின் முடிவில் இந்தப் பாலியல் பலாத்கார, துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று சொன்ன கையோடு, இரண்டு தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *