ட்ரிகர் விமர்சனம் (3.5/5)

காவல் துறையில் உள்ள சில களங்கத்தைக் காட்டும் படங்களும் வருகின்றன, அதே சமயம், காவல் துறையின் பெருமைகளைப் பற்றிக் காட்டும் படங்களும் நிறைய வருகின்றன. அந்த விதத்தில் பெருமையைப் பற்றிக் காட்டும் படம் இந்த ‘ட்ரிகர்’.

காவல் துறையில் கடமை தவறாமல் பணியாற்றிய தனது அப்பாவின் கடமையுணர்வைப் புரிந்து கொள்ளாமல் அவர் மீது களங்கம் சுமத்திய அதே துறையில் சேர்ந்து அப்பாவின் கடமையுணர்வை மற்றவர்களையும் புரிந்து கொள்ள வைக்கும் மகனின் கதைதான் இந்த ‘ட்ரிகர்’.

ஒரு ஆபரேஷனில் தன்னிச்சையாக செயல்பட்டதால் பணி நீக்கம் செய்யபடுகிறார் காவல் துறையில் இருக்கும் அதர்வா. அதன் பின் அவரை ‘உள் விவகாரங்கள்’ பற்றி ரகசியமாக விசாரிக்கும் ‘இன்டர்னல் அபேர்ஸ்’ குழுவிற்கு மாற்றுகிறார் கமிஷனர். தவறு செய்யும் போலீஸ் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கண்டுபிடிப்பதுதான் அந்தத் துறையின் வேலை. அதர்வா அந்தப் பணியில் இருக்கும் போது ஒரு குழந்தைக் கடத்தலைப் பற்றி விசாரிக்கச் செல்கிறார். அது தொடர்ச்சியாக வேறு பல தொடர்புகளுடன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அந்தக் கும்பலைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறார். அவர்கள் யார், அதற்குத் தலைமை வகிப்பது யார் என்பதைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பல போலீஸ் கதைகளைப் பார்த்ததுதான் தமிழ் சினிமா. புதிதாக ஏதாவது சொன்னால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இந்தக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். ஒரு சில காட்சிகளைத் தவிர்த்து பல காட்சிகள் புதிய காட்சிகள்தான். அதர்வா நடித்த ‘100’ படத்திலேயே பரபரப்பான திரைக்கதையைக் கொடுத்தவர், இந்தப் படத்திலும் மீண்டும் அவருடன் கூட்டணி சேர்ந்து பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

காக்கிச் சட்டை அணியாத காவல் துறை அதிகாரி வேடம் அதர்வாவுக்கு. அவர் என்ன வேலையில் இருக்கிறார் என்பது அவரது குடும்பத்தினருக்கே தெரியாது. இளம் வயது ஹீரோவாக இருந்தாலும் ஆக்ஷன் ஹீரோவாக பொருத்தமாகவே மாறி வருகிறார். நல்ல நல்ல கதைகளாகத் தேடிப் பிடித்து நடித்தால் அடுத்த கட்டத்திற்குப் பயணிப்பார். அப்பா மீது சுமந்த களங்கத்தை நீக்கத் துடிக்கும் ஒரு பாசமான மகனாக மனதில் இடம் பிடிக்கிறார்.

அதர்வா ஜோடியாக தன்யா. காதல் காட்சிகளோ, டூயட் பாடல்களோ இல்லாத ஒரு காதல். அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் நிறைவாக வந்து போகிறார் தன்யா.
அதர்வாவின் குழுவில் சின்னி ஜெயந்த், முனிஷ்காந்த், நிஷா இருந்தாலும் எந்த இடத்திலும் அவர் காமெடி என்ற பெயரில் நம்மை கஷ்டப்படுத்தவில்லை. தன் மகன் தன்னைப் பற்றி பெருமையாக நினைக்க வேண்டும் என்று கடமையில் ஒரு தியாகத்தைச் செய்கிறார் சின்னி ஜெயந்த்.

அதர்வாவின் அப்பாவாக அருண் பாண்டியன். அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏன் அப்படி ஆனது என்பதுதான் படத்தின் பிளாஷ்பேக். 1993ல் நடந்த அந்த விவகாரம் 2021ல் அவரது மகன் அதர்வா மூலமாக தீர்த்து வைக்கப்படுகிறது. அதர்வாவின் அம்மாவாக சீதா, வழக்கமான அம்மாவாக பாசத்தைப் பொழிகிறார். வில்லனாக ராகுல் தேவ் ஷெட்டி. பார்ப்பதற்கு ‘தில், கில்லி’ ஆசிஷ் வித்யார்த்தி தம்பி போல இருக்கிறார். இவருடைய உருட்டல், மிரட்டல் எதுவும் பெரிதாக எடுபடவில்லை.
படத்தில் பாடல்களுக்கான அவசியம் இல்லை என்பதை இயக்குனர் நன்கு உணர்ந்திருக்கிறார். ஒரு த்ரில்லர் படத்திற்குரிய பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் ஜிப்ரான்.

அனாதை ஆசிரமம், குழந்தைக் கடத்தல் என மேலோட்டமாக பல படங்களில் பார்த்த விஷயமாக இருந்தாலும் அதில் நிறைய ‘டீடெய்லிங்’ சொல்கிறார் இயக்குனர். இடைவேளை வரை மட்டும் சில காட்சிகள் தள்ளாடுகிறது. இடைவேளைக்குப் பின் முழுமையான ஆக்ஷன் படமாக நகர்கிறது. சில தேவையற்ற காட்சிகளை நீக்கி 2 மணி நேரத்திற்குள் படத்தை முடித்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *