தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் 27.2.2022 நாளை நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும் இயக்குனர் செல்வமணி தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இதுவரை இயக்குனர்கள் சங்கத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டியாளராக பாக்கியராஜ் பேசப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இரண்டு அணியினரும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடத்தினர். பாக்கியராஜ் பேசும்போது எங்களது அணியினர் வெற்றி பெற்றதும் நூறு நாள் வேலைத் திட்டம் போன்று முப்பது நாள் வேலைத் திட்டம், வட்டியில்லா கடன் திட்டம் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இணை, துணை, உதவி இயக்குனராக இருக்கும் வயதான உறுப்பினர்களுக்கு முப்பது நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கட்டாயம் வேலை வழங்க ஏற்பாடு செய்ய இருக்கிறோம். சங்கத்தின் நிதியிலிருந்து வட்டியில்லா கடனுதவி திட்டமும் அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்று பேசியதும் உறுப்பினர்கள் அரங்கம் அதிர கரவொலி எழுப்பினர்.
செல்வமணி அணியினர் நீண்ட காலமாக இருந்து வருவதால் நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும் என்ற மனநிலையில் பெரும்பாலான உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.