H வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் வெகு நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருச்சியிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அன்பு தியேட்டரிலும் வலிமை திரைப்படம் வெளியானது. அதில் முதல் காட்சியில் அஜீத் தோன்றியதை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் திரைக்கு அருகில் சென்று துள்ளி குதித்தனர். அப்போது ஒரு ரசிகர் மண் வாளியை எடுத்துக் கொண்டு நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
அதனைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சுரேஷ் அந்த ரசிகரை அமைதியாக இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கும் படி அறிவுறுத்தி உள்ளார். அதற்கு அந்த ரசிகர் எங்களை கட்டுப்படுத்த நீ யார்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் விரிவடைய அஜித் ரசிகர்கள் காவலரை அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினர் .
இதனால் காயமடைந்த காவலர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டால்மியாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் கோபிநாத் என்ற இரு அஜித் ரசிகர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது மட்டுமல்லாமல் சென்னையிலுள்ள பிரபல திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கின் இருக்கைகளை சேதப்படுத்தியும், கண்ணாடியை உடைத்தும் அட்டூழியம் செய்துள்ளனர்.