தமிழ் ராக்கர்ஸ் விமர்சனம் – (3.25/5)

அருண் விஜய், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், அழகம் பெருமாள், மாரிமுத்து, வினோதினி மற்றும் தருண் குமார் நடிக்க சோனி லைவ்வில் வெப் தொடராக வெளிவருகிறது “தமிழ் ராக்கர்ஸ்”. இத்தொடரை ஈரம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார்.

சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ஏ வி எம் நிறுவனம் இந்த தொடர் தயாரித்து மீண்டும் திரைத்துறையில் கால்பதித்துள்ளனர்.

கதைப்படி..,

நாயகன் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவரது மனைவி தான் ஐஸ்வர்யா மேனன். சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, கதையில் வரும் படத்தயாரிப்பாளர் அழகம் பெருமாள் உட்ச நட்சத்திரம் ஒருவரை வைத்து சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட படம் ஒன்றை எடுக்கிறார்.

படம் திரையரங்கிற்கு வருவதற்கு முன்பு படத்தை “தமிழ் ராக்கர்ஸில்” வெளியிடுவேன் என அட்மின் மிரட்ட, மிரண்டு போகிறது படக்குழு.

இந்த தமிழ் ராக்கர்ஸை பிடிக்க அருண்விஜய்யை நியமிக்கிறது காவல்துறை. இறுதியில் தமிழ்ராக்கர்ஸ் யார்.? அவரை பிடித்தார்களா.? தமிழ் ராக்கர்ஸை அழிக்க முடிந்ததா இல்லையா என்பதே இந்த தொடரின் மீதிக் கதை…

குற்றம் 23ல் கண்ட அதே மிடுக்கான அருண் விஜய்யை இதில் காணலாம். அப்படத்தின் தொடர்ச்சியாகவே இப்படத்தில் இணைந்திருப்பதை காண முடிந்தது. தனது நடிப்பிலும், ஸ்கோரிலும் எந்த இடத்திலும் குறை வைத்திருக்காமல் கொடுக்கப்பட்ட கேரக்டரை நிவர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். பைட் சீன்களில் அதிரடி காட்டியிருக்கிறார் அருண் விஜய். ஆனாலும், கொஞ்சம் கூட கெட்டப் மாற்றாமல் நடிப்பது சலிப்பு தட்டுகிறது.

நாயகியாக ஐஸ்வர்யா மேனன், அழகு தேவதையாக ஒரு சில காட்சிகளில் ஒளிர்ந்து மிளிர்கிறார். வானிபோஜன், அருண் விஜய்யோடு சேர்ந்து இன்வஸ்டிகேஷன் செய்யும் ஆபீஸர் தான். தனது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்து கொடுத்திருக்கிறார். இருந்தாலும் டப்பிங்கை அவரையே பேச வைத்திருந்திருக்கலாம்.

அழகம் பெருமாள், மாரிமுத்து இருவர்களும் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருந்தனர். மிகவும் அழகான கதை நகர்வை கொடுத்தாலும், பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம என்று தான் தோன்றியது.

எட்டு எபிசோடுகளாக உருவாகியிருக்கும் இந்த தொடரை, ஷார்ப்பாக படத்தொகுப்பு செய்து 4 எபிசோடுகளாக கொடுத்திருந்தால் தொடரை இன்னும் சுவாரஸ்யத்தை பலமாக ஏற்றியிருந்திருக்கும்.

கடைசி எபிசோடு பரபரக்க வைத்திருக்கிறது. அதிலும், அடுத்த பார்ட்’க்கான லீட் வைத்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அருண்விஜய் இன்னும் நான்கு போலீசாரை கூட வைத்துக் கொண்டு வில்லனின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்திருக்கலாம்.

ராஜசேகரின் ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது. அறிவழகனிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கும் ரசிகர்களே இங்கு அதிகம். அடுத்த பார்ட்’டில் அதை நிவர்த்தி செய்வார் என்று நம்பலாம்.

தமிழ்ராக்கர்ஸ் – தொடர்வண்டி போல் ஒரு இனைய தொடர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *