மெதுவாகத் தொடங்கி, நீதிமன்றத்தில் விறுவிறுப்பாகப் பயணிக்கும் ஒரு கதைக்களம்!
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சத்தியவான் சாவித்திரி. காதல், திருமண வாழ்க்கை, தனிப்பட்ட இழப்புகள், சட்டப் போராட்டம் எனப் பல உணர்வுகளைக் கலந்து ஒரு நீதிமன்றத் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
வாழ்க்கையில் பெரிய வழக்கறிஞர் என்று சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் சாவித்திரி (கீர்த்தி சுரேஷ்), திருமணத்தில் ஆர்வமில்லாமல் தனது வழக்கறிஞர் கனவை நோக்கிப் பயணிக்கிறாள். எதிர்பாராத விதமாக ஒரு ஐடி நிறுவனத் தலைவரை திருமணம் செய்து, இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து கனவும் நானவாகிறது.
தனது சீனியர் வழக்கறிஞரையே எதிர்த்து ஒரு கடினமான வழக்கில் வெற்றி பெறும் சாவித்திரி, தொழில் ரீதியாக முன்னேறினாலும், தொடர்ச்சியான வேலைப்பளுவும் உடல்நல அலட்சியமும் அவளது வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்துகின்றன. அதிலிருந்து மீண்டு கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையைச் சீரமைக்க முயற்சிக்கும் நேரத்தில், கணவன் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படுகிறான். கணவனைக் காப்பாற்றவும், அவன் நிரபராதி என்பதை நிரூபிக்கவும் சாவித்திரி களமிறங்குகிறாள். அதன் பிறகு நடக்கும் சட்டப் போராட்டங்களும், எதிர்பாராத திருப்பங்களும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றன.
திரைக்கதை & நடிப்பு
முதல் பாதியில் காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை என நிதானமாக நகரும் படம், இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றப் போராட்டமாக வேகம் எடுக்கிறது. கதையின் தொடக்கத்தில் இருக்கும் மெதுவான நகர்வு சில இடங்களில் பொறுமையைச் சோதித்தாலும், கதாபாத்திரங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ள அது உதவுகிறது.
கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பில் கதாபாத்திரத்தின் வெவ்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். உற்சாகமான இளம் பெண்ணாகத் தொடங்கி, வாழ்க்கையின் சோதனைகளால் மனதளவில் வலிமையான பெண்ணாக மாறும் அவரது நடிப்பு படத்தின் முக்கிய பலம்.
மிஷ்கின், அகங்காரம் கொண்ட மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வக்கீல் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். சாருகேஷும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து, கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கியிருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழிலையும் சமமாகக் கையாளும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. நீதிமன்றக் காட்சிகளுக்கு இடையே உணர்வுபூர்வமான தருணங்களையும் இணைத்து, இரண்டாம் பாதியில் மர்மத்தை ஒவ்வொரு கட்டமாக அவிழ்க்கும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. நம்பிக்கை வைத்த இடத்திலிருந்தே துரோகம் வரும்போது ஏற்படும் வலி குறித்த வசனம் மனதில் நிற்கிறது.
மேலும், ஓடிடி படமாக ஆரம்பித்து வெள்ளித்திரை படமாக மாறும் காட்சியிலும் கணிக்க முடியாத திருப்பங்களாலும் இயக்குனர் கவனம் பெறுகிறார்.
அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு முதல் பாதியில் காதல் காட்சிகளின் வண்ணமயமான சூழலை அழகாகப் பதிவு செய்கிறது. நீதிமன்றத்தின் கட்டுப்படுத்தப்பட்ட பின்னணியில் காட்சிகளுக்கு அதிக வாய்ப்பு இல்லாவிட்டாலும், கிடைக்கும் இடத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். சாம் சி.எஸ். இசையும் பின்னணி இசையும் கதையின் பதற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பம் படத்திற்கு நல்ல நிறைவைத் தருகிறது.
இறுதித் தீர்ப்பு
தொடக்கத்தில் மெதுவாக நகர்ந்தாலும், வலுவான நடிப்பு, சுவாரஸ்யமான நீதிமன்றப் போராட்டம், உணர்வுபூர்வமான திரைக்கதை மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகியவற்றால் சத்தியவான் சாவித்திரி ரசிக்க வைக்கும் திரைப்படமாக அமைகிறது.

