அப்பா குட்டி – திரை விமர்சனம் 3.5/5

விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டிருக்கும். அந்த வகையில், ஒரு குழந்தையின் மீது பாசம் கொண்டு தந்தையாக மாறும் மனிதனின் வாழ்க்கையையும், அவன் மறைத்து வைத்திருக்கும் கடந்தகாலத்தையும் மையமாக வைத்து உருவாகியிருக்கிறது அப்பா குட்டி. இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களை இயக்கிய மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஊட்டிக்கு குழந்தையுடன் வரும் விஜய் ஆண்டனி, அந்தக் குழந்தையை அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்து வருகிறார். குழந்தை வளர வளர, அவளுடைய பள்ளி ஆசிரியையான ப்ரீத்தி அஸ்ரானி, விஜய் ஆண்டனியின் குழந்தை மீதான பாசத்தைப் பார்த்து அவரிடம் காதல் கொள்கிறார். ஆனால், காதலை ஏற்காமல் நட்பாகப் பழக விரும்பும் விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில், குழந்தைக்கு ஏற்படும் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினை பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது. அந்த உண்மைகள் என்ன? குழந்தையை அவர் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் பாதியில் குழந்தைக்கும் விஜய் ஆண்டனிக்கும் இடையிலான பாசம், கதாபாத்திரங்களின் இயல்பான உறவுகள் என ரசிக்க வைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைய இருக்கின்றன. கதை தொய்வின்றி நகர்வதால், பார்வையாளர்களும் கதைக்குள் எளிதாக ஒன்றிவிடுகிறார்கள். ஆனால், இடைவேளைக்குப் பிறகு வரும் திருப்பங்களும், எதிர்பாராத சம்பவங்களும் கதையின் உணர்வுப்பூர்வமான தன்மையிலிருந்து விலகி, தேவையற்ற கிளைக் கதைகளுக்குள் பயணிக்கத் தொடங்குகின்றன. இதனால், முதல் பாதியில் உருவான பாசமும் உணர்வும் இரண்டாம் பாதியில் சற்றே தடுமாறுகின்றன.

விஜய் ஆண்டனி தனது நடிப்பில் மீண்டும் கவனம் ஈர்க்கிறார். குழந்தையுடனான பாசம், வலியை வெளிப்படுத்தும் காட்சிகள் என உணர்ச்சிகரமான தருணங்களில் இயல்பாக நடித்துள்ளார். ப்ரீத்தி அஸ்ரானி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். வில்லத்தனமான நடிப்பில் பக்ஸ் கவனம் ஈர்க்கிறார். ஹரிப்ரியா, ஹரிதா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். ஜென்சன் திவாகர், முருகானந்தம் உள்ளிட்டோர் தங்களது நடிப்பால் படத்திற்குத் துணை நிற்கிறார்கள். நீதிபதியாக வரும் நடராஜனும் நம்பகமான நடிப்பை வழங்கியுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக, பாடல்களைவிட பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. ஊட்டியின் அழகை ஒளிப்பதிவு சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

குழந்தை மீதான பாசம், குடும்ப உணர்வுகள், மனித உறவுகள் என முதல் பாதியில் அழகாகப் பயணிக்கும் படம், இரண்டாம் பாதியில் மையக்கதையிலிருந்து விலகும் சில காட்சிகளால் கவனம் சிதறுகிறது. திரைக்கதையில் இரண்டாம் பாதியை இன்னும் செம்மைப்படுத்தியிருந்தால், படத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

தீர்ப்பு: உணர்வுபூர்வமாக மனதைத் தொடும் படம்; ஆனால் இரண்டாம் பாதியில் சில தடுமாற்றங்கள். சில கேள்விகளுக்கு விடையில்லை.