ஊரடங்கு காலத்தில் நம்மால் முடிந்தவரை பசிப்பிணி ஆற்றுவதே நமது தலையாய கடமை – அபூபக்கர்

பக்ரீத் வாழ்த்துச் செய்தி!

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனை பலி கொடுக்கத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் பக்ரீத் பண்டிகை!

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை பறைசாற்றும் நாள் இதுவாகும். ஆனால் இந்த ஆண்டு உலகம் முழுக்க கொரோனா நோயால் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம்.

இக்காலத்தில் உடல் தூய்மை மட்டுமல்லாது, உள்ளத் தூய்மையோடு இறை நம்பிக்கை கொண்டு, மதங்களை கடந்து, மனிதநேயத்தை மனதில் நிலைநிறுத்த வேண்டிய நேரமிது.

பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்த முடியாத பெரும் இன்னலை நாம் கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தி இல்லாத மக்கள் அனைவருக்கும் குர்பானி கொடுத்து இஸ்லாமியர் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரின் பசியாற்றுவது நம் முழுமுதற் கடமையாக மேற்கொள்வோம்.

பக்ரீத் நாளில் மட்டுமல்லாது நோய்த்தொற்று காலங்களில் ஊரடங்கு காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் அக்கம்பக்கத்தினர் அனைவருக்கும் நம்மால் முடிந்தவரை பசிப்பிணி ஆற்றுவதே இஸ்லாமியர்களின் தலையாய கடமையாக எடுத்துக்கொள்வோம்.

தியாகத்தின் சிறப்பை மனதில் நிறுத்தி இஸ்லாம் போதிக்கும் வழியை பின்பற்றி அனைவரும் நம் சகோதரர்கள் என்ற எண்ணத்தோடு இந்த நாளை எதிர்கொள்வோம்.

ஒற்றுமை உணர்வும், உறவும் மட்டுமே எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் இந்த தேசத்தை தலைநிமிரச் செய்யும் என்பதை மனதில் நிறுத்தி அனைவரும் இந்தியர்கள் ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்.

அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்படிக்கு,
பிரசிடெண்ட் அபுபக்கர்,
தலைவர்,
இந்திய ஹஜ் அசோசியேஷன்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *