‘கோடியக்கரை’ படத்தில் இடம்பெறும் நாய்க்கு பிரபல மலையாள நடிகரின் பெயரா?

துல்கர் படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது ஏன்?: இயக்குநர் விளக்கம்

‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை இயக்குநர் அனுப் சத்யன் தெரிவித்துள்ளார். அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த ‘வரனே அவஷ்யமுண்டு’ படம் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் சுரேஷ் கோபியின் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து காமெடி செய்தது தமிழர்களை கோபம் அடையச் செய்தது. இதையடுத்து துல்கர் சல்மான் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், பிரபாகரன் சர்ச்சை குறித்து அனுப் சத்யன் கூறியதாவது,

‘வரனே அவஷ்யமுண்டு’ அரசியல் படம் அல்ல. அந்த வசனம் வேலுப்பிள்ளை பிரபாகரனை குறிக்கவில்லை. நான் இலங்கைக்கு சென்றுள்ளதால் பிரபாகரன் பற்றி எனக்கு தெரியும். போரால் பாதிக்கப்பட்ட ஜாஃப்னா, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு நான் கடந்த ஆண்டு சென்று அங்குள்ள மக்களிடம் பேசினேன். எனக்கு பிரபாகரன் பற்றி தெரியும். அதனால் தான் இல்லாத விஷயத்தை சொல்லி எதிர்மறையான கருத்துக்களை மக்கள் பரப்புவதை பார்த்து கஷ்டமாக இருக்கிறது. எனக்கு ஒரு நடுத்தர வயது மலையாளி பெயர் தேவைப்பட்டது. அப்பொழுது தான் பட்டனபிரவேஷத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபாகரன் பெயர் நினைவுக்கு வந்தது. வெளிநாட்டு பெயர் இல்லாமல் நடுத்தர வயது மலையாளியின் பெயரை நாய்க்கு வைத்து அந்த கதாபாத்திரம் அழைத்தது யாரையும் பாதிக்காத நகைச்சுவை ஆகும் என்றார்.

இது ஒருபுறம் இருக்க,

தமிழில் சௌத்ரி மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ரமன் பாலா மற்றும் முராரி குமார் நடிக்க, பாயின்ட் காலிமர் பிலிம்ஸின் ருத்ரம் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘கோடியக்கரை’ திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அப்படத்தில் இடம்பெறும் நாய் கதாபாத்திரத்திற்கு துல்கர் பெயரை சூட்டி உள்ளார்கள். இது பழி வாங்கும் நடவடிக்கையா? அல்லது யதார்த்தமாக அமைந்ததா என்பது சர்ச்சைக்குள்ளாகும்போதுதான் தெரிய வரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *