ஜேம்ஸ்பாண்ட் கெட்டப்பில் அமைச்சர் ஜெயக்குமார்! ரகசியம் என்ன?!

ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா?

தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் யாருமே பார்த்திராத வகையில் வலம் வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும் சரி,அலுவலக ரீதியாகவும் சரி எப்போதுமே அதிரடியாக இருக்கும். களத்தில் இறங்கினால் அதிரடி ஆட்ட நாயகனாக மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொள்வதில் முன்னோடியாகவே இருக்கிறார்.

எத்தனையோ சோதனைகள், சங்கடங்கள், தோல்விகள், தேவையற்ற வீண் வதந்திகள், விமர்சனங்கள், பழிவாங்கல்கள்,போட்டி, பொறாமை என எதுவந்தாலும் அவற்றை புன்சிரிப்போடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கல்லூரி காலகட்டங்களில் இருந்த அதே மனநிலையோடு தான் இன்னமும் மனதை இளமையாக வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.அவரது தொடர் வெற்றிக்கும் இதுவே காரணமாக அமைகின்றது.

தொகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காண்பது மட்டுமல்ல இவரது அரசியல், அதைத்தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்து மக்களின் பிரச்சனை எதுவென்றாலும் இவரது தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை அனுசரணையாக கேட்டறிந்து அதற்கான தீர்வை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.எனவேதான் இவர் மீதான நம்பிக்கையை அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய உழைப்பை மிகவும் நேசித்தார் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா.

அவரது மறைவுக்குப் பின்னரும் இவருக்கான அடையாளமும், அங்கீகாரமும் இன்றளவும் குறையவில்லை. இப்போதும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு மகிழ்ச்சி மத்தாப்பை ஒளிரச்செய்யும் மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். ஏதாவது வித்தியாசமான ஒன்றை செய்து காட்டுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

அந்த வகையில் இப்போது புதிய வேடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தில் தொப்பி, கண்ணாடி, கலர் சட்டை என அவர் எடுத்த செல்பி வைரலாக பரவி வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் சினிமாவில் நடிக்கப் போகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஆனால் இது குறித்து அவரிடம் கேட்டபோது,” ஒரு ஜாலிக்காக நானே எடுத்துக் கொண்ட புகைப்படம் காலேஜ்ல படிக்கிற ஞாபகம் வந்ததால இந்த செல்பி எடுக்கணும் தோணுச்சு அதனால எடுத்தேன்” என்கிறார்.

மொத்தத்தில் இயல்பான, ஜாலியான எதையும் டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளக்கூடிய அமைச்சர் என்பது இவர் கடந்து வந்த பாதைகளின் மூலம் தெரிய வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *