விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், ரொனிட் ராய் மற்றும் பலர் நடிப்பில், கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவானப் படம் “லைகர்”. பூரி ஜெகநாத் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ 9 சார்பாக ஆர்.கே.சுரேஷ் தமிழகத்தில் விநியோகம் செய்கிறார்.
கதைப்படி..,
நான் லீனியர் பேட்டர்னில் ஆரம்பிக்கும் இக்கதையை கதாநாயகனான லைகர் சொல்லத் துவங்குகிறார். ஆனால், கதையை ஆரம்பிக்கும் முன்பே எனக்கு பெரிதாக கதை சொல்ல வராது. ஆனாலும் முயற்சிக்கிறேன் என்று பிளாஷ் பேக்கை ஆரம்பிக்கிறார்.
ஃபைட்டரான தன் தந்தையை இழந்த திக்குவாய் ஹீரோ. தந்தையின் பெயரை காப்பாற்றுவதற்கும், சாம்பியன் ஆவதற்கும் மும்பையிலுள்ள சிறந்த ஃபைட்டரிடம் பயிற்சி பெற வருகிறார். பின்பு, அங்கிருக்கும் ஹீரோயினுடன் காதல் வசப்பட சற்று திசை மாறுகிறது ஹீரோவின் பாதையும் கதையின் போக்கும்.
இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்து லைக்குகளை பெற்று வரும் ஹீரோயின். “ஓவர் நைட்டில் ஒபாமா” ஆவது போல் பிரபலமாகிறார். அப்போது ஹீரோவுக்கு திக்குவாய் என்பது ஹீரோயினுக்கு தெரியவர. ஹீரோவை விட்டுவிட்டு, ஹாலிவுட்டில் நடிக்க வெளிநாடு செல்கிறார் ஹீரோயின்.
மீண்டும் தான் ஒரு ஃபைட்டர் என்பதை உணர்ந்த ஹீரோ, கடுமையாக பயிற்சி செய்து நேஷனல் சாம்பியன் ஆகிறார். பின்பு உலக அளவிலான போட்டியில் அவர் கலந்துக் கொண்டாரா? அவரின் காதல் என்ன ஆனது? மைக் டைசன் இக்கதையினுள் எப்படி வந்தார்? என்பது மீதிக்கதை…
விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பு சிறப்பு. இப்படத்திற்காக அவர் கடுமையான உடற்பயிற்சி செய்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது. ஆனாலும், அவரின் அனைத்து கஷ்டமும் கதையின் போக்கால் வீணானது.
அனன்யா பாண்டே அளவான நடிப்புடன் திரையில் கவனம் ஈர்க்கிறார். ரொனிட் ராய்க்கு கச்சிதமான கதாபாத்திரம்.
ராயபுரம் பாஷை பேசும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தாலும். அவ்வப்போது பாகுபலி அவதாரம் எடுக்கிறார்.
மைக் டைசன் எதற்காக இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார்?! என்பது மிகப்பெரும் கேள்விக்குறியும், ஆச்சர்யக்குறியும். கடைசி 5 நிமிடங்கள் திரைக்கு வந்தாலும், கெத்து காட்டுவர் என்று பார்த்தால் மொக்கை வாங்கி செல்கிறார். அவரை எதிர் பார்த்து சென்ற அனைவர்க்கும் மிகப் பெரும் ஏமாற்றமே மிஞ்சும்.
இயக்கத்திலும், கதையிலும் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர் பூரி ஜெகநாத்.
தனிஷ்க் பட்சி, சுனில் கஷ்யப், விக்ரம் மோண்ட்ரோஸ் என மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தும். ஒருவரின் இசையும் சொல்லும் அளவிற்கு இல்லை. சண்டை காட்சிகளில் பல இடங்களில் இசையமைத்திருந்தால் படத்திற்கு வேகம் சேர்ந்திருக்குமோ என்ற எண்ணம். பல இடங்களில் “மௌன ராகம்” தான்.
லைகர் – ஏமாற்றம் நிச்சயம்.