திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா – சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி ரவிசங்கர் யெலமஞ்சலி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி, நிர்வாக தயாரிப்பாளர் தினேஷ், இயக்குநர் சிவ நிர்வானா, நாயகன் விஜய் தேவரகொண்டா, ஒளிப்பதிவாளர் ஜி. முரளி, இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சிவ நிர்வானா பேசுகையில், ” குஷி பயணம் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகிறது. உணர்வுபூர்வமான தருணங்கள்… கலவையான உணர்வுகள்… இந்தியா முழுவதும் பயணித்து மலை வாசஸ்தலங்கள், பனி பிரதேசங்கள் என வெவ்வேறு நிலவியல் அமைப்புகளில் பணியாற்றிய வித்தியாசமான அனுபவம்… இவையனைத்திலும் விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
எனது இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘மஜிலி’ வெளியானது. அதன் பிறகு குஷி வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறேன். ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக தான் குஷியை உருவாக்கி இருக்கிறோம்.
குஷி- காதல், கொண்டாட்டம் இதனை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. அதனால் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சியாக ரசிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
அர்ஜுன் ரெட்டி படம் வெளியான பிறகு, அவரது நடிப்பை பார்த்து வியந்து, விஜய் தேவரகொண்டாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை உருவாக்கவேண்டும் என்று விரும்பினேன். அவர் மீதான என் அன்பின் வெளிப்பாடு தான் ‘குஷி’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம். இந்த குஷி படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால்… நான் எந்த அளவிற்கு விஜய் மீது அன்பு வைத்திருக்கிறேன் என்பது வெளிப்படும். இதற்காக நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குஷி படத்தை உருவாக்கத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்” என்றார்.