கர்ணன் – திரைவிமர்சனம் 4/5

கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில், சமீபத்தில் தனது 2வது தேசிய விருதை பெற்ற தனுஷ் நடிக்க, முதல் படத்திலே தான் பேசிய சமூக அரசியலின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில், உருவான கர்ணன் திரைப்படம் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்க்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி படிக்கும் முன்பு அதில் பணியாற்றிய முக்கிய நபர்களை பெயர் விவரம் பார்ப்போம்.

முக்கிய நடிகர்கள்:

தனுஷ், லால், லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, ரஜீஷா விஜயன், கௌரி கிஷன், நட்ராஜ், ஜி.எம்.குமார், சண்முகராஜன், யோகி பாபு, அழகம் பெருமாள், “பூ” ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முக்கிய கலைஞர்கள்:

இசை: சந்தோஷ் நாராயணன்,
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்,
படத்தொகுப்பு: செல்வா.ஆர்.கே,
கலை இயக்கம்: தா.ராமலிங்கம்,
சண்டை காட்சிகள்: திலிப் சுப்பராயன்.

கதையும், கதைக்களமும், கதையின்-காலமும்:

1990களின் இடைப்பட்ட ஆண்டுகளில் கதைக்கான காலமாகவும், திருநெல்வேலி – தூத்துக்குடி இடைப்பட்ட கிராம பகுதியில் கதைக்கான களமாகவும் காட்டப்பட்டுள்ளது. நடுரோட்டில் வலிப்பில் கிடந்து தவிக்கும் சிறுபெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு நிற்காமல் செல்லும் பேருந்து மற்றும் பல வாகனங்கள், இறந்து விடும் அந்த சிறுபெண் ஊரின் தெய்வமாக மாறி நிற்கிறாள் என்ற காட்சியுடன் தொடங்கி, ஏற்கனவே பெரும் வெற்றி பெற்ற “கர்ணனை கண்டா வரச்சொல்லுங்க” பாடலுடன் ஆரம்பிக்கும் படத்தில் தலையற்ற புத்தர் சிலை, தலை மூடிய நிலையில் போலீஸ் வண்டியில் கொடுமைப்படுத்தி கோர்ட்க்கு அழைத்துச் செல்லப்படும் தனுஷ், அவரை பார்க்க ஏங்கி தவிக்கும் ஊர்மக்கள் என காட்சிகள் விரிந்து , சிறிது காலம் பின்னோக்கி செல்கிறது. பேருந்து நிறுத்தம் இல்லாமல் தவிக்கும் பொடியன்குளம் ஊர் மக்கள், பக்கத்துக்கு ஊரான மேலூருக்கு சென்று ஏற வேண்டிய நிலை. ஆதிக்க-சாதிய மனநிலையில் இருக்கும் மேலூர் மக்களால் ஏற்படும் பிரச்சனைகள் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப முடியாத கையறு நிலைக்கு கொண்டு நிறுத்துகிறது. மேலும், தொடர்ந்து நடைபெறும் இந்த அவலங்களை கண்டு ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து எதிர்வினையாற்றும் கர்ணன் மற்றும் சில ஊர் மக்கள், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன அதனை எப்படி கர்ணனும் ஊர் மக்களும் எதிர்கொண்டனர் என்பதாய் கதை அமைத்துள்ளார் மாரி செல்வராஜ்.

சிறப்புகள்:

இந்த திரைப்படத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் மிக முக்கியமான சிறப்பு, பாத்திரமைப்பும், கதை மாந்தர்களின் தேர்வு. நாயகன், நாயகி மட்டுமல்லாது அனைவரின் பாத்திரமைப்பும் அவர்களின் தேர்வும் அவ்ளோ அருமையாக அமைந்துள்ளது. அடுத்ததாக அனைத்து நடிகர், நடிகைகளிடம் நல்ல வேலை வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வைத்துள்ளார் மாரி செல்வராஜ். தனுஷ் அவர்களுக்கு தனது வாழ்நாளில் என்றும் பார்த்து மெச்சிக் கொள்ளும் அளவிற்கான மற்றும் ஒரு முக்கியமான படமாக இது அமைந்துள்ளது. அவரும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க வைக்கிறார். அவருக்கு அடுத்த படியாக மலையாள நடிகர் லால். முதல்முறையாக அவரது நடிப்பிற்கு தீனி கொடுக்கும் அளவிலான ஒரு பாத்திரத்தை தமிழ் சினிமா வழங்கியுள்ளது என்றே கூறலாம். அடுத்தபடியாக தனுஷ் அக்காவாக வரும் லக்ஷ்மி ப்ரியா அவர்களின் நடிப்பு நமக்கும் இப்படி ஒரு அக்கா கிடைக்காத என்று இளைஞர்களை ஏங்க வைக்கும்படி இருந்தது. யோகிபாபு காமெடியன் என்ற கட்டத்தில் இருந்து குணசித்திர நடிகர் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளார். இவர்கள் மட்டும் அல்லாது படத்தில் வரும் நிறைய மாந்தர்கள் லாலின் மனைவியின் அக்காவாக நடித்த பாட்டியாகட்டும், கதாநாயகியின் தோழியாக வரும் கௌரி கிஷன், தனுஷ் அப்பாவாக வரும் “பூ” ராம், அம்மாவாக நடித்த சுபத்ரா, ஊர் தலைவர்களாக வரும் கி.எம்.குமார், ஷண்முகராஜன் என நிறைய கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. அவர்களின் நடிப்பும் கூட. யோகிபாபு தவிர்த்து மற்ற அனைவரது வட்டார வழக்கு நன்றாகவே இருந்தது.
சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் மட்டுமல்லாது அவரது பின்னணி இசையும் கதைக்கேற்ப அருமையாக அமைந்தது. குறிப்பாக இரண்டாவது பாதியில் கதையின் தீவிரத்தை உணர்த்த அவரது பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. கலை இயக்குனர் தா.ராமலிங்கம் அவர்களின் உழைப்பை திரையில் நன்றாக பார்க்க முடித்தது. பொட்டல்காடு போன்ற இடத்தில நாமே இருப்பது போன்ற உணர்வை கொடுத்து இருந்தார். காட்சிகளையும், நடிகர்களின் சிறப்பான கதைக்கேற்ற வகையில் காட்டியதில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அமர்களப்படுத்தியிருந்தார்.
மாரி செல்வராஜ். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளையும் அவர்களுக்கு எதிராக நடக்கும் அரசியலையும் அதனை எதிர்த்து போராடினாலும் அவர்களுக்கு நடக்கும் நிலையையும் நம் மனதில் ஆழ பதியுமாறு உணர்த்தியுள்ளார். அது போல உவமையாக காட்டும் கால்-கட்டிய கழுதை, ஊருக்குள் ஒருவராக வலம் வரும் பெண்-தெய்வம் காட்டுப்பேச்சி, பரிமேல் ஏறி வரும் வாளேந்திய கர்ணன் என்று ஃப்ரேமிற்கு ஃப்ரேம் மிகவும் தெளிவாக, கூர்மையாக, அபாரமான திரைமொழியில் தான் பேசவிரும்பும் அரசியலை பேசியுள்ளார். மேலும் மேலும் சிறந்த படங்கள் செய்ய அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பலவீனங்கள்:

ரஜிஷா விஜயன் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே செய்து இருந்தாலும் அவருக்கான பாத்திரம் கதாநாயகனை காதலிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது வருத்தம். மலையாள சினிமாவில் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’, ‘ஜூன்’ போன்ற நல்ல படங்களிலும் மற்றும் பல பரிணாமங்களில் நடித்து வரும் ரஜிஷாவை மேலும் உபயோகப்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. படத்தின் முதல் பாதி, மக்களின் பிரச்சனைகளையும், கதையின் மாந்தர்களை நிறுவிக்க எடுத்துக் கொண்ட நேரம் சற்று கூடுதலாக அமைந்து சிறிய தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று வெல்வேறு இடங்களில், காலங்களில் நடந்த பிரச்சனைகளை இணைத்து ஒரு கதையில் கொண்டு வருவது புதிதல்ல எனினும் இறுதியில் நடக்கும் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க வேறு வழிமுறைகளை கையாண்டு இருக்கலாமோ என்ற கேள்வி வராதளவிற்கு திரைக்கதையை பலப்படுத்திருக்கலாம். இவையெல்லாம் சிறு குறைகளே.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்று கர்ணன் என்பதை மறுக்க முடியாது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் அகிம்சை கடைபிடித்து படித்து முன்னேற வேண்டியதின் நிலையை எடுத்துரைத்த மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தில் சில நேரங்களில் வன்முறையை கட்டாயம் கையிலெடுக்க வேண்டி வந்த சூழ்நிலைகள் எடுத்துரைத்து நெஞ்சில் நீங்காதொரு படத்தை கொடுத்திருக்கிறார்.

கர்ணன் – வாள் வீச்சில் வென்றுள்ளான் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *