இருமுடி கட்டு – விமர்சனம் 4/5

“மாஸ் ஹீரோவாக மட்டும் இல்லாமல்… ஒரு அப்பாவாக ரவி தேஜா மனதில் நிற்கிறார்!”

ரவி தேஜா என்றாலே அதிரடி ஆக்‌ஷன், கலகலப்பான வசனங்கள், மாஸ் என்ட்ரி என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இருமுடி கட்டு சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. குடும்பப் பாசம், தந்தையின் பொறுப்பு, பக்தி, மனிதனின் மனமாற்றம் என உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகர்கிறது படம்.

குடும்பத்தின் மீது பாசம் இருந்தாலும், சில தவறான பழக்கங்களால் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டிருக்கும் ஒரு தந்தையின் கதையாக படம் தொடங்குகிறது. மகளுடனான அவரது உறவுதான் கதையின் இதயம். ஒரு கட்டத்தில் ஐயப்ப தீட்சை அவரது வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் என கதை வேகம் பெறுகிறது.

இது வெறும் ஐயப்ப பக்தியைப் பேசும் படம் கிடையாது. ஒரு மனிதன் தன்னுடைய தவறுகளை உணர்ந்து எப்படி மாறுகிறான் என்பதையும் பேசுகிறது.

ரவி தேஜாவின் வழக்கமான மாஸ் சாயலைக் குறைத்து, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். மகளுடன் வரும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பாக கவனம் ஈர்க்கிறது.

சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டும் அதே நடிகர், மகளின் முன்னால் ஒரு அப்பாவாக நிற்கும் தருணங்களில் மிகவும் இயல்பாகத் தெரிகிறார்.

காவேரி கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் கதைக்கு தேவையான குடும்ப உணர்வை அழகாகக் கொடுத்திருக்கிறார். கணவனுக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாக உள்ளது.

ரவி தேஜாவுடன் இணைந்து வரும் காட்சிகளில் நக்ஷத்ராவின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

அப்பா – மகள் பாசம்

படத்தின் மிகப்பெரிய பலம் இதுதான்.

அப்பா–மகள் உறவை வெறும் சென்டிமென்ட் காட்சிகளாக இல்லாமல், கதையின் முக்கியமான தூணாக பயன்படுத்தியிருக்கிறார்கள். மகளுக்காக ஒரு தந்தை எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை சில காட்சிகள் அழுத்தமாகச் சொல்கின்றன.

பக்தியையும் குடும்பக் கதையையும் ஒன்றாக இணைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக தீட்சை தொடர்பான காட்சிகள் படத்தின் சூழலுக்கு வலு சேர்க்கின்றன.

ஆனால் சில இடங்களில் திரைக்கதை எதிர்பார்க்கக்கூடிய பாதையில் செல்வதும், இரண்டாம் பாதியில் வேகம் சற்று குறைவதும் சிறிய குறைகள்.

சிவா நிர்வாணா, ஐயப்ப தீட்சையை வெறும் பக்தி அம்சமாக மட்டும் பயன்படுத்தாமல், அதை ஒரு மனிதனின் மனமாற்றத்துடனும் குடும்ப உணர்வுகளுடனும் இணைத்திருக்கிறார். பெண் குழந்தைகளை பயத்துடன் அல்லாமல் தைரியத்துடன் வளர்க்க வேண்டும் என்ற சமூகக் கருத்தும் படத்தில் இடம்பெறுகிறது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வரும் பக்திப் பாடலும் பின்னணி இசையும் படத்தின் ஆன்மிக மற்றும் உணர்ச்சிகரமான சூழலுக்கு நன்றாகப் பொருந்துகின்றன.

மொத்தத்தில்….

“மாஸ் ஹீரோவை பார்க்க வந்தால் குடும்ப மனிதனை காட்டுகிறது…

ஒரு அப்பாவின் பாசத்தை உணர்ந்து பார்க்க வந்தால் மனதைத் தொடுகிறது!”

ரவி தேஜாவின் வித்தியாசமான நடிப்பு, அப்பா–மகள் பாசம், பக்தி பின்னணி ஆகியவற்றுக்காக இருமுடி கட்டு பார்க்கலாம்.