இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு (YASSC 2026)
சென்னை மண்டல மாநாடு
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தை இணைக்கும் மாநில அளவிலான வானவியல் அறிவியல் மாநாடு.
தமிழக அளவில், கல்லூரிகளில் பயிலும் இளநிலை மாணவர்களுக்காக நடத்தப்படும் 2026 ஆண்டுக்கான“ இளையோர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு (Youth Astronomy and Space Science Congress – YASSC)” தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக தற்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி நிறுவனத்தால் துவங்கப்பட்ட இம்மாநாடு தற்பொழுது இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆதித்யா-L1 திட்டத்தின் இயக்குனர் திருமதி நிகர் ஷாஜி, ராணுவ விஞ்ஞானி முனைவர் டில்லி பாபு உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகளின் கூட்டு ஆலோசனையின் பேரில் நடைபெறும் இம்மாநாடு, தமிழக இளம் தலைமுறையினர், வான்அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களாக உருவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டினை, தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி- TASS நிறுவனத்துடன், பிரபல அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களான கணித அறிவியல் நிறுவனம் (IMSc) – சென்னை; இந்திய வானிய இயற்பியல் நிறுவனம் (IIA) – பெங்களூரு; தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST) – சென்னை; தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) – திருவாரூர்; ராமன் ஆராய்ச்சி அறக்கட்டளை (RRF) – திருச்சிராப்பள்ளி; ஏய்டு இந்தியா – சென்னை; அறிவியல் பலகை – சென்னை; மற்றும் சேலம் – நாமக்கல் மாவட்ட மகேந்திரா கல்வி நிறுவனங்கள், மற்றும் டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி – சென்னை இணைந்து நடத்துகின்றன.
“புதிய விண்வெளி யுகம் – அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தை இணைத்தல்” என்ற கருத்துப் பொருளுடன் இரண்டு கட்டமாக நடக்க இருக்கும் 2026 ஆண்டுக்கான இம்மாநாடு, முதலில் மண்டல வாரியாகவும், பின்னர் மாநில அளவிலும், நடக்க்கிறது. முதல் கட்டமாக,மண்டல அளவில் நடக்கும் மாநாட்டில், மாணவர் அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநில அளவில் நடக்கும் மாநாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
இந்த ஆண்டு, ஆய்வுக் கட்டுரை/ அது சார்ந்த விளக்க படங்கள், வானியல் சார்ந்த புதிர் விளையாட்டுகள், வானியல் குறும்படங்கள், வானியல் புகைப்படங்கள் என நான்கு விதமான நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை சமர்ப்பிப்பார்கள்.
முன்னதாக, பல்வேறு கட்டமாக மாணவர்களுக்கான அறிமுகம் மற்றும் ஒருங்கிணைப்பு முகாம்கள் நடந்து முடிந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சென்னை மண்டல மாநாடு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், 26.09.2026, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற்றது. இம்மண்டல மாநாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் 250 க்கும் மேற்பட்டோர் 125 அணிகளாக பங்கு கொண்டார்கள்.
கல்லூரி பேராசிரியர்கள் 30 மதிப்பீட்டாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தனர்.
மொத்தம் 125 அணிகள் கலந்து கொண்ட சென்னை மண்டல மாநாட்டில், 41 மாணவர்கள் அணி தேர்வு செய்யப்பட்டு, இரண்டாவது கட்டமாக, நவம்பர் மாதம் மூன்றாம் வாரம் நடக்க இருக்கும்,மாநில மாநாட்டில் பங்கு பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, கல்லூரி முதல்வர் Dr. K.A.மரிய ஆரோக்கிய ராஜ், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் திரு Dr. S.வின்சென்ட், ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி திரு. கணேசன் கிரகதுரை, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் துணை பொது மேலாளர் திரு. பிரதீப் படேல், அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் திரு.ஸ்ரீகுமார், எயிட் – இந்தியா ஒருங்கிணைப்பாளர் திரு.சீனிவாசன், சிறார் அறிவியல் எழுத்தாளர் திரு.ஹரி கிருஷ்ணன், கன்னிமாரா நூலக அலுவலர் திரு. ஈஸ்வரன் மற்றும் வானியல் மன்ற பொறுப்பாளர்கள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள். மாநில நிர்வாகிகள் திரு. சக்திவேல், திரு. செல்லகுமார், Dr. ரவிக்குமார், Dr.ஜோசப் பிரபாகர், திருமதி. ரமாதேவி, திருமதி.டானியா, திரு.பழனிசாமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். YASSC – 2026ன் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு ம.ஜெகதீஸ்வரன் அவரகள் வரவேற்று பேசினார்கள். மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி. ராஜராஜேஸ்வரி அவர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
மாநாட்டுக்கான ஏற்பாட்டினை, டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து, மாநில, மாவட்ட TASS நிர்வாகிகள், மற்றும் அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

