வெற்றிப்பட இயக்குனர்கள் என கூறி உப்புமா படங்களை இயக்கிவரும் இயக்குனர்கள்

சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் பல திரைப்படங்கள் கொரோனா பாதிப்பிற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் தான். அதே கொரோனா காலத்தில் தலை தூக்கிய ஓடிடி-க்கள், நல்ல படங்கள் மூலமாகவும் வெப் சீரீஸ் மூலமாகவும் அதிக வரவேற்பை பெற்றுவருகிறது.

மேலும், மல்டிபிளஸ் தியேட்டர்களில் சராசரி டிக்கெட் விலையே 150 ரூபாய்க்கும் மேல் தான். ஆனால் ஓடிடி ரூபாய் 400க்கும் 1000 ரூபாய்க்கும் ஓராண்டு சாப்ஸ்க்ரிப்ஷன்களை வழங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 1000 ரூபாய் என்பது ஒரு குடும்பம் திரையரங்கிற்கு சென்று ஒரு படம் பார்க்கும் செலவு தான்.

ஆனால், தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்கள் ஏற்கனவே தகிட தத்தோம் ஆடிவரும் நிலையில். விமர்சக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என்பது விரல் விட்டு என்னும் அளவிற்கு குறைவான படங்கள் மட்டுமே கடந்த 7 மாதத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் கார்கி, ஜோதி, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷங்க, ராக்கெட்ரி மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் தான்.

ரசிகர்களால் கல்லாகட்டிய படங்கள் என பார்த்தால் வலிமை, பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், டான் என்ற பெரிய பட்ஜெட் படங்கள்.

இப்படியான ஒரு அவல நிலை தமிழ் சினிமாவில் இருக்க, தன் முந்தைய ஹிட் படங்களை தற்போது வெளியாகவுள்ள படத்தின் ப்ரோமோஷனில் உபயோகித்து மக்களை ஏமாற்றி வரும் வேலை அதிகம் நடைபெற்று வருகிறது.

அப்படி மக்களை ஏமாற்றிய படங்கள் என பார்த்தல் துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான “மாறன்”.  இதற்கு முன் கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா திரைப்படமும் தோல்விப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் வெற்றி கண்ட ராம் பாலாவின் இயக்கத்தில் வெளியான “இடியட்”. ஈட்டி படம் இயக்கிய ரவி அரசின் “ஐங்கரன்”. சிவி(2007) படத்தை இயக்கிய கே.ஆர்.செந்தில் நாதனின் “சிவி-2”. மேயாத மான் மற்றும் ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமாரின் “குலு குலு”. சில தினங்களுக்கு முன் வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் யாமிருக்க பயமேன் இயக்குனர் டீகேவின் “காட்டேரி”. 8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீ கணேஷின் “குருதி ஆட்டம்” என அனைத்துப் படங்களுமே “FROM THE DIRECTOR OF” அல்லது “FROM THE MAKERS OF” என்ற டேகை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இப்படியாக தொடர் தோல்விப் படங்களும், மக்களின் எதிர்பார்ப்பை போலியாக தூண்டி திரையரங்கிற்கு வரவழைத்து அவர்களின் கோபத்திற்கு ஆளானால், பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே திரையரங்கில் ஓடும் என்பது உறுதியான ஒரு விஷயமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *