பாட்னா:
பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாள் அன்று வெளியிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அங்கு பின்பற்றப்பட்டு வந்தது.
அதன்படி பீகார் அமைச்சர்களின் புதுப்பிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் நேற்று வெளியாகின. 31 அமைச்சர்கள் அறிவித்த அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்கள் பட்டியலில் 16 பேர் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகள் வைத்துள்ள தகவல் வெளியானது.
சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஜனக் ராமிடம் ரூ.1,25,000 விலையுள்ள 30.06 ரக துப்பாக்கியும், ரூ.4,05,000 விலை மதிப்புள்ள 32 ரக கைத்துப்பாக்கியும் உள்ளது. அதேபோல் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் சாம்ராட் சவுத்ரியிடம் ரூ.4,00,000 மதிப்புள்ள துப்பாக்கி உள்ளது.
நவீன ரக துப்பாக்கிகள்
முதல்வர் நிதிஷ் குமார் அரசில் இடம் பெற்றுள்ள மூன்று பெண் அமைச்சர்களில் இருவர் ஆயுதம் வைத்துள்ளனர். துணை முதல்வர் ரேணு தேவியிடம் கைத்துப்பாக்கி உள்ளது. அவரிடம் துப்பாக்கி மற்றும் இரட்டை குழல் துப்பாக்கியும் இருப்பதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லேசி சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஜமா கான், பிரமோத் குமார், ஷ்ரவன் குமார், ராம்சுரத் ராய், சந்தோஷ் சுமன், மங்கள் பாண்டே, அசோக் சவுத்ரி, சுமித் குமார் சிங், சுபாஷ் சிங், சுனில் குமார், ஜெயந்த் ராஜ் மற்றும் நாராயண் பிரசாத் ஆகியோர் சொந்தமாக ஆயுதங்கள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிகள் வைத்திருக்கும் கேபினட் அந்துஸ்துள்ள அமைச்சர்களுக்கு பீகார் அரசு சார்பில் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.