மஹத், மானசா, தேவிகா, VJ ஆஷிக் மற்றும் சிலர் நடிப்பில் உருவான இணையத்தொடர் “எமோஜி”. சராசரி மனிதனுக்கிருக் கூடிய உணர்வுகளை வெளிப்படுத்த தான் எமோஜிகளை உபயோகிப்போம். சிரிப்பு, அழுகை, கோபம், வருத்தம், ஆச்சர்யம், உற்சாகம், ஏமாற்றம் என அனைத்து உணருவகளையும் கொண்டுள்ளதால் இந்த தொடருக்கு “எமோஜி” என்ற பெயரை இயக்குனர் ரங்கசாமி வைத்துள்ளாரோ என்ற எண்ணம்.
கதைப்படி..,
கதையின் நாயகன்(மஹத்) ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்கிறார், பின் டெகாதலான் எனும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் மானாசாவை பார்த்து காதல் வசப்படுகிறார் மஹத். அனைத்தும் நன்றாகப் பயணப்பட்டு கொண்டிருக்க இவர்கள் இருவருக்கும் உள்ள பிளாஷ் பேக்கால் பிரேக் அப் ஆகிறது. அந்த பிளாஷ் பேக் என்ன? என்பது இவர்களுக்கான கதை..
மானசாவை பிரிந்த பிறகு, ஏற்கனவே காதல் தோல்வியை சந்தித்த தேவிகாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் மஹத். 2 ஆண்டுகள் சுமூகமாக உறவில் இருக்க இருவரும் திடீரென டைவர்ஸுக்கு அப்ளை செய்கிறார்கள். எதற்காக இந்த டைவர்ஸ்? அல்லது இருவரும் இணைந்தார்களா? என்பது மீதிக்கதை…
ஓடிடி தளம் என்பதால் சுதந்திரம் அதிகம், எப்படி பட்ட வசனத்தையும் பேசலாம், காட்சிப்படுத்தலாம். அதை நன்கு அறிந்த இயக்குனர், அதிகமான ரொமான்ஸ் காட்சிகளை படம் பிடித்துள்ளார். என்ன தான் (A) படமாக இருந்தாலும். முகம் சுழிக்கும் அளவிற்கு வசனங்களும், காட்சிகளுக்கும் இல்லை. டீசண்டான ஒரு அடல்ட் சீரீஸை இயக்கியுள்ளார் இயக்குனர் ரங்கசாமி.
மஹத் தனது நண்பன் சிம்புவை பார்த்து மட்டுமே நடிக்கக் கற்றுக்கொண்டிருப்பர் போல. சிம்புவை போலவே முக பாவனைகளும், உடல் மொழியும். வசனங்கள் உச்சரிப்பது கூட சிம்புவை போல் தான் இருக்கும். ஆனால் கூட இதற்கு முன் இவர் நடித்த படங்களை காட்டிலும் இதில் சிறப்பான நடிப்பே.
மானசா மற்றும் தேவிகா இக்கதைக்கு சரியான தேர்வு. போட்டிபோட்டு நடித்தார்கள் என்று தான் சொல்லணும். முதல் 3 எபிஸோடுகளில் மானசா சேர்த்து வாய்த்த அத்தனை பாராட்டுகளையும் பின் வரும் 4 எபிஸோடுகளில் கொள்ளையடித்துச் செல்கிறார் தேவிகா.
இந்தக் கதையில் அனைவரும் சரியான தேர்வாக இருக்க, VJ ஆஷிக் விஷயத்திலும் கடைசி எபிஸோடிலும் கோட்டை விட்டு விட்டார் இயக்குனர். VJ ஆஷிகிற்கு நடிப்பும் வரவில்லை, காமெடியும் வரவில்லை. அவர் பேசுவதையே பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்தால். திடீரென பாடகராக அவதாரம் எடுத்து ராப் சாங் பாட ஆரம்பித்து நம்மை அலறடிக்கச் செய்கிறார்.
முதல் 3 எபிஸோட் கொஞ்சம் மெதுவாக போகும், அடுத்த 3 எபிஸோட் இந்த காலத்திற்கேற்ப போகும். கடைசி 7வது எபிஸோட் எப்படி இருக்கும் என்பதை கண்டு மகிழுங்கள்.
எமோஜி – அட போங்க ஜி