டை நோ சார்ஸ் விமர்சனம் – (3.25/5);

ஹீரோவாக அறிமுகம் உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, பிரபல புகைப்பட கலைஞர் மானேக்‌ஷா, ஜானகி மற்றும் அருண் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டைனோசர்ஸ்”.

கதைப்படி,

நாயகன் உதய கார்த்திக், ரிஷி ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு (ஸ்ரீனி) மாறா என்ற பெரிய ரவுடி உயிர் நண்பனாக இருக்கிறார். வில்லன் மனேக்‌ஷாவிடம் அடியாளாக இருக்கும் மாறா திருமணத்திற்குப் பிறகு திருந்தி வாழ்கிறார். இது பிடிக்காத மனேக்‌ஷா திட்டம் போட்டு தனது எதிரியை வைத்து மாறாவை போட்டுத் தள்ளி விடுகிறார். இந்த கொலைக்கு ரவுடிசம் சுத்தமாக பிடிக்காத நாயகன் உதய் கார்த்திக்கும் ஒரு விதத்தில் காரணமாகிறார். இதையடுத்து நாயகன் உதய் கார்த்திக் தன் அண்ணனின் நண்பன் மாறாவின் கொலைக்கு எப்படி பழி தீர்க்கிறார்? என்பதே டைனோசர்ஸ் படத்தின் மீதி கதை.

லோக்கல் சென்னையின் எதார்த்த முகங்களை அச்சுப் பிசகாமல் அப்படியே பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர் மாதவன். முதல் பாதியை எதார்த்த மனிதர்களோடு ஜனரஞ்சகமாக ஆரம்பித்து பின் சீரியஸ் கதைக்குள் பயணித்து அட்டகாசமான அதிரடி நிறைந்த இன்டர்வல் காட்சியோடு முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டாம் பாதியையும் ஜனரஞ்சகமாக ஆரம்பித்துப் போகப் போக பழி வாங்கும் படலத்தை நகைச்சுவை கலந்த திரைக்கதையோடு சற்று குழப்பம் நிறைந்த காட்சி அமைப்புகள் மூலம் கொடுத்து படத்தை முடித்துள்ளார்.

Dinosaurs (DieNoSirs) movie review

இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் எதுவென்று பார்த்தால் படத்தின் வசனமும், இன்டெர்வல் காட்சிக்கு முன்பு ஆரம்பிக்கும் சீரியஸ் ஸ்கெட்ச் மற்றும் இன்டெர்வல் பிளாக், மற்றும் கலகலப்பான கிளைமாக்ஸ் காட்சி. இவை மூன்றும் இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. அதேபோல் இப்படத்தின் மைனஸ் என்று பார்த்தாலும் இதே காட்சிகள் தான்!! இந்த மூன்று காட்சிகளையும் பார்த்த மக்கள் படம் முழுவதும் இதேபோன்று பரபரப்புடன் இருக்கும் காட்சிகள் தான் வரும் என்று எதிர்பார்த்து பின்பு ஏமாற்றம் அடைகின்றனர். முதல் பாதியில் வரும் இன்டெர்வல் பிளாக் கொடுத்த கூஸ்பம்ப் மொமென்ட், படம் முழுவதும் இல்லாமல் போனது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் இதை ஒரு காமெடி படமாக எடுத்துக் கொள்வதா அல்லது ஒரு கேங்ஸ்டர் படமாக எடுத்துக் கொள்வதா என்ற குழப்பம் பார்ப்பவர்களுக்கிடையே நிலவுவதும் அதற்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

திரைக்கதையில் ஒவ்வொரு எபிசோடாக ஆங்காங்கே ரசிக்கும்படி இருந்தாலும் அவை ஒரு முழு கோர்வையாக இல்லாததே இப்படத்திற்கு சற்று மைனஸ் ஆகவும் அமைந்து, அதுவே சற்று அயற்சியையும் கொடுத்துள்ளது. இருந்தும் முழுப் படமாக பார்க்கும் பட்சத்தில் சில எபிசோடுகளாக ஆங்காங்கே தரமான ரசிக்கும்படியான காட்சிகள் அமைந்து படத்தை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறது. குறிப்பாகப் படத்தின் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இதுவே இயக்குநர் மாதவன் மீது பெரும் கவனத்தை ஈர்க்க உதவி செய்துள்ளது. புதுமுக நாயகன் உதய் கார்த்திக் மிக எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரே மாதிரியான நடிப்பை ஒரே நேர்கோட்டில் சரிவரக் கொடுத்து அதை ரசிக்கும் படியும் செய்திருக்கிறார்.

Dinosaurs (DieNoSirs) movie review

படத்தின் பிளஸ் கேரக்டராக பார்க்கப்படுவது உதய் கார்த்திக் அண்ணனின் நண்பரும், சூப்பர் டூப்பர், டிரைவர் ஜமுனா, ரிபப்ரி பட நடிகர் (ஸ்ரீனி) மாறாதான். இவரின் இன்டர்வல் பிளாக் காட்சி மொத்த படத்தையும் தாங்கிப் பிடித்து இருக்கிறது. படம் முழுவதும் அதிகம் வசனம் பேசாத இவர் இன்டர்வல் பிளாக்கில் பேசியிருக்கும் அந்த ஒற்றைக் காட்சியில் வரும் வசனம் ஒன்றே மொத்த படத்திற்கும் போதும். அந்த அளவு சிறப்பான நடிப்பை அந்த ஒற்றைக் காட்சியில் தன் உடல், பொருள், ஆவி, உழைப்பு என அனைத்தையும் கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். இந்த காட்சி தியேட்டரில் கைத்தட்டல்கள் மூலம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Dinosaurs (DieNoSirs) movie review

வழக்கமான நாயகியாக வரும் நடிகை சாய் ப்ரியா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். படத்தில் உதய் கார்த்திக்கின் நண்பர்களாக வரும் சில்லு வண்டுகள் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர். குறிப்பாகத் தலையில் கலர் அடித்துக்கொண்டு அமீபாவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சஜி கவனம் பெறுகிறார். வில்லன் மனேக்‌ஷா ஒரு நல்ல தேர்வு. இவரும் இவர் கூட்டாளிகளும் மற்றும் எதிரி கேங்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளனர். இவர்களது வசன உச்சரிப்புகளும் சிறப்பாக அமைந்திருக்கிறது. சின்ன குழந்தை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உதய் கார்த்திக்கின் அம்மா ஜானகி சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாகத் தன் கணவனின் கத்தி உள்ளிட்ட சாமான்களை எடுத்து வீசும் காட்சியில் மாஸ் காட்டியுள்ளார்.

Dinosaurs (DieNoSirs) movie review

போபோ சசி இசையில் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. ஜான் சீன் ஒளிப்பதிவில் லோக்கல் சென்னை அழகு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி உள்ளார். முற்றிலும் புது முகங்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு அட்டெம்ப்ட் செய்து அதில் பாஸ் மார்க் வாங்கியதற்கு இயக்குநர் மாதவனுக்கு பாராட்டுக்கள். முதல் பாதி கொடுத்த கூஸ் பம்பை இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால் இப்படம் நிச்சயமாக இன்னமும் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். இருந்தும் முழு படத்திலும் ஆங்காங்கே தென்படும் சில எபிசோடுகள் மாசாக அமைந்து நம்மை ரசிக்க வைத்து படத்தைக் கரை சேர்த்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *