கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது;

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திங்கள் மற்றும் கலைஞர்களின் உருவாக்கத்தில், பல ப்ளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். பல பிரமாண்ட படங்களை தயாரித்து வரும், லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான ‘சந்திரமுகி 2’ படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள கங்கனா ரனாவத் கதாப்பாத்திர லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்திரமுகி பாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்திரமுகியாக அவரது தோற்றம், வசீகரிக்கும் அழகுடன், கர்வமிகுந்த மங்கையாக, மிரட்டலாக அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற சந்திரமுகியை மீண்டும் தரிசிப்பதின் மகிழ்ச்சியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

பன்முக திறமை மிக்க கலைஞரான ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ இந்த ஆண்டில், தமிழ் திரையுலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்றாகவுள்ளது. படம் குறித்து தற்போது அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திவருகிறது.

இந்த திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருக்கிறார். மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக இந்த திரைப்படம் தயாராகிறது. இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்திற்காக தேசிய விருது பெற்ற தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

திகில் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி கே எம் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *