ஜையீத் கான் மற்றும் சோனல் மோண்டோரியோ, அச்யுத் குமார் நடித்திருக்கும் படம் “பனாரஸ்”. ஹீரோ, ஹீரோயினாக ஜையீத் கான் மற்றும் சோனலுக்கு அறிமுக படம் இது. ஜெயதீர்த்தா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
பான் இந்தியா படமாக பல மொழிகளில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. சக்தி பிலிம் பேக்ட்ரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்துள்ளார்.
கதைப்படி,
பணக்கார குடும்பத்தில் பிறந்து வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் நாயகன் ஜையீத் கான். அம்மா இல்லாததால் தந்தையின் அளவில்லா பாசத்தில் வளரும் செல்லப்பிள்ளை. தன் நண்பர்களிடம் கொடுத்த சவாலுக்காக நாயகி சோனலை காதலிப்பது போல் நடித்து அவரின் படுக்கையறை வரை சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
அப்புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி விடுகிறது. மிகவும் கவலையுற்று தனது படிப்பை விட்டு நாயகி சோனல், தனது சித்தப்பா(அச்யுத் குமார்) இருக்கும் பனாரஸுக்கு சென்று விடுகிறார்.
புகைப்படம் இணையத்தில் வைரலானதால், மனம் நொந்து போன ஹீரோ நாயகியிடம் மன்னிப்பு கேட்க பனாரஸ் செல்கிறார்.
நாயகனின் மன்னிப்பை நாயகி ஏற்றுக் கொண்டாரா.? இவர்களுக்குள் காதல் உருவானதா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஜையீத் கானுக்கு இப்படம் முதல் படம் என்றாலும், முதல் படம் என்பது போல் இல்லாமல் ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், எமோஷ்னல் காட்சிகளிலும் கட்சிதமான நடிப்பு தான்.
ஆக்ஷன் காட்சிகளிலும் அதகளம் தான். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்க் எட்டிப் பார்க்கிறது.
படத்திற்கு கூடுதல் அழகு சேர்கிறார் நாயகி சோனல். படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் காட்சி வரையிலும் நடிப்பிலும் அழகிலும் மிளிர்கிறார்.
சப்போர்டிங் கதாபாத்திரங்களான, சாம்பு மற்றும் நாராயண் சாஸ்திரி கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாகவும் எமோஷ்னலாகவும் கவனம் ஈர்த்தனர்.
அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். ஆனால் பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது.
படத்திற்கு பெரும் பலமே ஒளிப்பதிவு தான். அத்வைதாவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக கொடுத்து நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார்.
காதல் கதையில் ஒரு டைம் ட்ராவல் மாயத்தை கொண்டு வந்தது புதுமை தான். ஆனால், அதை முழுமையாக எடுத்துச்செல்லாமல் கிளைமாக்ஸில் மட்டும் காட்டியது படத்தின் பாதையை மாற்றியமைத்ததோ என்ற எண்ணம்.
பனாரஸின் அழகை காணவும், அழகிய காதலை உணரவும் இப்படத்தை பார்க்கலாம்.
பனாரஸ் – கங்கையில் ஒரு காதல் கதை