அன்பறிவு திரைவிமர்சனம் – (2/5)

சத்யஜோதி பிலிம்ஸ் T.G தியாகராஜன் வழங்கும், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் மற்றும் இசையில், நெப்போலியன், விதார்த், சாய்குமார், தீனா, ஆஷா சரத், காஷ்மீரா,ஷிவானி ராஜசேகர், ‘ஆடுகளம்’ நரேன், ரேணுகா,அர்ஜய், சரத் ரவி, முல்லை, சாய் சித்தார்த், மாரிமுத்து நடிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகி ஓடிடி தாளத்தில் வெளியான படம் ‘அன்பறிவு’.

படத்தின் முதல் காட்சி முதலே தனது வில்லத்தனத்தை ஆரம்பிக்கும் விதார்த், நெப்போலியனுக்கு வீட்டோடு மருமகனாக இருக்கும் தனது நண்பனான சாய்குமாரை கட்சி பதவிக்காக ஒருசில ஏமாற்று வேலை செய்து இரட்டை குழந்தையான ஹிப் ஹாப் தமிழா ஆதியில் ஒருவரை தூக்கி கொண்டு ஊரைவிட்டு ஓடும்படியாக செய்து விடுகிறார்.

அம்மா ஆஷா சரத் உடன் வளரும் அன்பு(ஆதி) முரடனாகவும் கோபக்காரனாகவும் அப்பாவின் மீது விரோதம் கொண்ட மகனாகவும், அப்பா சாய்குமார் உடன் வளரும் அறிவு (ஆதி) சாதுவாகவும், அம்மாவின் மீதும் அண்ணன் அன்பு மீதும் அதீத நேசம் கொண்டவனாகவும் வளர்கின்றனர்.

24 வருடம் கழித்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் அறிவு, அம்மா அப்பாவிற்கு இடையிலான விரிசலை சரி செய்தாரா? அனைத்து பிரச்சனைக்கும் காரணமான விதார்த்(ஐ) பழி வாங்கினாரா? இல்லை தனது தாத்தா நெப்போலியனின் கோபத்திற்கு ஆளானாரா? என்பது மீதி கதை.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பு வழக்கம் போல் ஒரு ஜாலியான பாடி லாங்குவேஜ் உடன் இருந்தது, வெளிநாட்டில் இருக்கும் அறிவு கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியது ஆனால் மதுரை காரனாக கிராமத்தில் இருக்கும் அன்பு பாத்திரம் சிறிது சொதப்பல் தான்.

கதாநாயகி இருவருக்கும் அதிகப்படியான காட்சிகள் இல்லை என்றாலும், அவர்கள் தோன்றிய காட்சிகள் அனைத்திலும் ரசிக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நெப்போலியன் அவர்களின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டியதில்லை, எப்போதும் ஒரு தனி மாஸ் தான், படம் முழுமையாக வரும் நெப்போலியன் கதைக்கு தேவையான வலிவை நடிப்பின் மூலம் தாங்கி பிடித்துள்ளார்.

ஆஷா சரத் காட்சிக்கு காட்சி ரசிக்கும் வகையிலும் உணர்வு பூர்வமாகவும் நடித்துள்ளார்.

சாய் குமார் அவருக்கு கொடுக்கப்பட்ட வலுவை புரிந்து, தேவைப்பட்ட இடங்களில் கச்சிதமான நடிப்பை வெளி படுத்தி அந்த பாத்திரத்தின் வலியை உனைத்தியுள்ளார்.

தீனா காமெடி மட்டும் செய்யாமல், கைதி படத்தில் வருவது போல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் பக்காவாக நடித்துள்ளார்.

முல்லை ஒரு சில காட்சிகள் மட்டும் வந்து சென்றாலும், அவர் இருந்த அணைத்து இடத்திலும் சிரிக்க வைத்திருக்கிறார்.

‘ஆடுகளம்’நரேன், மாரி முத்து, அர்ஜெய் ஆகியோர் ஒரு சில காட்சிகள் மட்டும் வந்தாலும் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தினர்.

ஹிப் ஹாப் ஆதி இசையில் சிறிது சொதப்பல் தான், பின்னணி இசையில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம், பாடல்களும் சுமார் வகையறா.

அறிமுக இயக்குனர் என்பதால் அஸ்வின் ராம் முந்தைய தமிழ் சினிமாவில் M.G.R முதல் சூர்யா வரை இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படங்களின் சாயல்,கதைக்களம் அப்படியே இருப்பது போல் இயக்கியிருக்கிறார்.

வசனத்தில் கோட்டை விட்டு விட்டார் பொன் பார்த்திபன்.

பிரதீப் ராகவ் அவர்களின் படத்தொகுப்பு கதையயை சிறிது சோர்வடைய வைத்தது

ஒளிப்பதிவில் மாதேஷ் மாணிக்கம் கிராமத்தின் அழகையும், வெளிநாட்டின் அற்புதத்தையும் காண்பித்துவிட்டார்.

உலகம் சுற்றும் வாலிபன்,ராஜாதி ராஜா, வேலு, ஆம்பள, வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களை பார்த்தவர்கள் இந்த படத்தை தவிர்க்கலாம்.

அன்பறிவு – அன்பான வேண்டுகோள் அறிவுள்ள புதிய கதையை படமாக்குங்கள்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *