எஸ் எம் பாண்டி இயக்கத்தில், ஆனந்த கிருஷ்ணன் கதையில், சத்யா, டேனியல் அனிபோப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், பாண்டியன், செண்ட்றாயன் நடிப்பில், உதயகுமார் ஒளிப்பதிவில், ஜோகன் இசையில் கவிதா தயாரிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “ராபர்”.
மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சத்யா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதைப்படி,
கிராமத்தில் அவ்வபோது சின்ன சின்ன நகை திருட்டில் ஈடுபட்ட சத்யா, தனது தாயை விட்டு சென்னைக்கு வருகிறார். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். வாழ்க்கையை சொகுசாக வாழ ஆசைப்பட்ட சத்யா, மீண்டும் தனது ராபரி வேலையை செய்யத் தொடங்குகிறார்.
தனியாக செல்லும் நபரிடம், முகமூடி அணிந்து நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வருகிறார் சத்யா.
அலுவலக பணி முடிந்ததும் இதையே தனது வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார் சத்யா. திருடிய நகைகளை பெரியவர் ஒருவரிடம் வழக்கமாக விற்று வந்திருந்தார் சத்யா. அந்த பெரியவர் இறந்துவிட, வேறு ஒரு கை கிடைக்கிறது.
டேனியல் போப் திருட்டு நகைகளை வாங்கி பிசினஸ் செய்து வருவதில் “கிங்”ஆக இருக்கிறார். சத்யா கொடுக்கும் நகைகள் டேனியல் போப்பிற்கு செல்கிறது.
இந்நிலையில், டேனியல் போப் டீமோடு பகைத்துக் கொள்கிறார் சத்யா. அதே சமயம், சத்யா இளம்பெண் ஒருவரிடம் நகை திருடிய போது, அப்பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.
ஒருபக்கம், இறந்த பெண்ணின் அப்பாவான ஜெயபிரகாஷ் திருடனான சத்யாவை தேட, மற்றொரு பக்கம் டேனியல் போப் டீம் சத்யாவை தேட இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சத்யா, தனது கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக கொடுத்து கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவரின் அப்பாவி தனமான முக பாவனையுடன் வில்லத்தனம் செய்வது ரசிகர்களை படத்தின் மீதான கவனத்தை ஈர்க செய்துள்ளது.
நகையை திருடும் போது மாட்டிக் கொண்டு ஓடும் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் தனது தாயுடன் உரையாடும் காட்சியிலும் தனக்கான உடல்மொழியை நன்றாகவே பயன்படுத்தியுள்ளார் சத்யா. அவரின் டைலாக் டெலிவரி மட்டும் கொஞ்சம் மேம்பட்டிருக்கலாம்.
மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் போப், இப்படத்தில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதில் நன்றாகவும் பொருந்தியிருக்கிறார்.
தாயாக நடித்த தீபா ஷங்கர் க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்.
ஜெயபிரகாஷ் மற்றும் பாண்டியன் இருவரும் தங்களது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்திலேயே கதையின் அடிநாளத்தைத் தொட்டு படம் நகர்ந்ததால், படத்தின் மீதான ஈர்ப்பு நம்மை தொற்றிக் கொள்கிறது.
ஜோகனின் இசையில் பின்னணி இசை படத்தினை வேறு ஒரு தளத்திற்கு தூக்கி வைத்துவிட்டது என்று கூறலாம். அதிலும், படத்தின் மெயின் BGM படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளரான உதயகுமார், காட்சிகளை நன்றாகவே காட்சிப்படுத்தியதில் கைகொடுத்திருக்கிறார். நகைகளை திருடும் காட்சிகளிலெல்லாம் ஒளிப்பதிவை நன்றாகவே கையாண்டிருக்கிறார் உதயகுமார்.
ராபர் – தியேட்டரில் மக்களை கூட்டதை சூறையாடும்.