பிற நாட்டு மக்கள் அனைவருக்கும் அமெரிக்காவில் குடியேறுவது என்பது மிகப்பெரிய கனவுகளில் ஒன்று. அப்படி ஆசைப்பட்டு சென்றவர்கள் பலர் அதில் எப்படி பலர் அடிமையாக ஆக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தின் ஒரு வரி கதை.
கையில் கிடைத்த ஒரு கால்பந்து விளையாட்டு விளம்பரத்தை வைத்துக்கொண்டு அமெரிக்கா சென்று கால் பந்தாட்ட வீரனாக ஆசைப்படுகிறான் மெக்சிகோவைச் சேர்ந்த சிறுவன் ஆரி லோபஸ்.
அங்கு வேலை பார்த்துக்கொண்டே வீட்டுக்கு பணமும் அனுப்ப முடியும், அவனுடைய கனவும் நிறைவேறும் என்று சொல்லி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்று ஒரு கொத்தடிமை வளாகத்தில் விட்டுவிடுகிறார் ஒரு ஏஜென்ட்.
உடைகளை உற்பத்தி செய்யும் அந்த நிறுவனத்தில் ஆரியைப் போன்று பல சிறுவர்களும், சிறுமியர்களும் கடத்திவரப்பட்டு அங்கே அடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். 18 மணி நேர வேலை – சரியாக செய்யவில்லை என்றால் அடி, உதை, சவுக்கடி என்று அந்த இருண்ட கொட்டடிக்குள் அடிமைப்படுத்தப்பட்ட ஆரி லோபஸ் என்ன ஆனான் என்பதுதான் படத்தின் மீதி கதை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தருணத்தில் ஆரி மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் பெரிய அதிர்ச்சி நிலவுகிறது. அங்கே வாங்கும் ஒவ்வொரு சவுக்கடியையும் தன் கால்பந்தாட்டக் கனவால் சகித்துக் கொண்டும் ஆரி வாழ்வது கண்ணீர் சிந்த வைத்து விடுகிறது.
அதிலும் தன் மீது அன்பைப் பொழிந்த தோழியை இரவில் காணவில்லை என்றதும் அவளைத் தேடி அந்த ரகசிய கட்டடத்தினுள் அவன் அடிமேல் அடித்து வைத்து பயணப்படும் போது என்ன விதமான கொடூர சிக்கலில் இவன் அகப்படுவானோ என்று மனம் பதை பதைக்கிறது. எதிர்பார்த்ததைப் போலவே அவனது தோழி பலாத்காரத்துக்கு உள்ளாகி கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்து அவனும் பிடிபடாமல் தப்புவதும் திக் திக் நிமிடங்கள்.
மொழி தெரியாத இடத்தில் வாய் பேச முடியாத அந்த சிறுவன் ஆரி லோபஸின் அற்புதமான நடிப்பில் ஆஸ்கர் தரம். மரண அடியை வாங்கும் போது கூட அதையெல்லாம் தன் கனவுக்காக பொறுத்துக் கொண்டிருந்த விட்டு, இறுதியில் எதிர்த்து நின்று நிற்கும் போது சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற கூற்றை நிரூபித்திருக்கிறான்.
தான் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்று நம்பும்போது அவனிடமிருந்து வரும் கண்ணீரின் மூலம் அற்புத நடிப்பை வாங்கிய இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பல இடங்களில் நம் இந்தியப் படங்களை நினைவூட்டும் படியே காட்சி அமைப்புகள் வந்து போகின்றன.
அந்த இடத்தின் பயங்கரத்தை காட்டிய ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுகள். அதேபோல் அதன் உணர்வுகளை சொல்லும் இசையமைப்பாளரும் பாராட்டுக்குரியவர்.
இப்படி ஒரு படத்தை எடுத்து அமெரிக்காவின் இன்னொரு முகத்தை வெளியுலருக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர் ரூபஸ் பார்க்கரின் துணிச்சலும், நல்லெண்ணமும் பாராட்டுக்குரியது.
படத்தில் நடித்த ஹரி லோபசே படம் முடிந்ததும் திரையில் தோன்றி “இந்த படம் இனிதாக முடிந்தது. ஆனால் இதேபோன்று மாட்டிக் கொண்டிருக்கும் கடத்தப்பட்ட சிறுவர் சிறுமியரின் வாழ்க்கை எல்லாம் இப்படி இனிய முடிவுடன் இருப்பதில்லை..!” என்ற உண்மையை கூறும் போது நமக்கு கண் குளமாகுகிறது.
அமெரிக்காவில் அதிபராக பதவி ஏற்கும் ஒவ்வொருவருமே இதுபோன்ற குழந்தைக் கடத்தலை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தான் ஆட்சி அமைக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையையும் கூறுகிறது படம்.
சிட்டி ஆப் ட்ரீம்ஸ் – நிஜத்திலும் மெய்ப்பட வேண்டும்