யானை திரைவிமர்சனம் – (3.5/5)

அருண் விஜய், ப்ரியா பவானி ஷங்கர், அம்மு அபிராமி, சமுத்திரக்கனி, யோகிபாபு, இம்மண் அண்ணாச்சி, ராதிகா நடிப்பில் ஹரி இயக்கத்தில் ட்ரம் ஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் தான் யானை. அருண் விஜயின் சினிமா வாழ்க்கையில் முதல் முறை மிக பெரும் பொருட் செலவில் உருவான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கதைப்படி..,

ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் பகுதியிலுள்ள இரு தரப்பினருக்கு இடையே பல வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. ஒன்று ராஜேஷ் குடும்பம் மற்றொன்று ஆடுகளம் ஜெயபாலன் குடும்பம்.

ராஜேஷின் மூத்த மனைவியின் மகன்களாக வருகின்றனர் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட் மற்றும் சஞ்சீவ்… ராஜேஷின் இரண்டாவது மனைவி ராதிகாவிற்கு மகனாக இருக்கிறார் அருண்விஜய். ஜெயபாலனின் மகன்களாக ட்வின்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வில்லன் ராமச்சந்திர ராஜூ.

கடல் சார்ந்த மீன்கள், இறால்களை ஏற்றுமதி செய்வதில் இவர்கள் இரு குடும்பத்திற்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், பிரச்சனை ஒன்றில் ஜெயபாலனின் இரண்டு மகன்களில் ஒருவரை போலீஸ் கொன்று விடுகிறது. இதற்கு காரணமான அருண் விஜய்யின் குடும்பத்தை பழி வாங்க முயல்கிறார் ஜெயபாலனின் மற்றொரு மகன்.

வில்லன் ராமச்சந்திர ராஜூவிடம் இருந்து எப்படி அருண் விஜய் தனது குடும்பத்தை காப்பாற்றினார்.? வீட்டிற்குள் நடந்த பிரச்சனை ஒன்றை எப்படி கையாண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் அருண் விஜய் மிடுக்கான தோற்றத்தில் தனக்கே உரித்தான உடல் மொழியில் மற்ற படங்களை விட பல மடங்கு உழைப்புக் கொண்டு இப்படத்தில் அதகளம் செய்திருக்கிறார். முழு படத்தையும் தனி ஒருவனாக தன் தோள் மீது சுமந்து சென்றிருக்கிறார் என்றே சொல்லலாம். எமோஷ்னல், காதல், ஆக்‌ஷன், காமெடி என பல இடத்தில் தன் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் வரும் சிங்கள் ஷாட் சண்டைக்காட்சிகள் அனைத்திலும் மிக பிரம்மதமாக கையாண்டுள்ளார் அருண் விஜய்.

ஜாதி வெறி பிடித்தவராக வருகிறார் சமுத்திரக்கனி, தனது கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், போஸ் வெங்கட், சஞ்சய், ராதிகா, ஐஸ்வர்யா, ராஜேஷ், ஆடுகளம் தனபாலன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு தான்.

எப்போதும் இவரை வைத்து தான் கதையில் ஏதோ திருப்பம் நடக்கப் போகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் அம்மு அபிராமி. அம்மு அபிராமியின் கதாபாத்திரத்தின் தேர்வை இயக்குனர்கள் சற்று மாற்ற வேண்டும்.

வில்லனாக வந்த ராமச்சந்திர ராஜூவிற்கு பதிலாக வேறொரு வில்லனை இயக்குனர் ஹரி முயற்சித்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. நடிப்பில் சிறப்பு என்றாலும் மண் சார்ந்த வில்லனாக அவர் இல்லை.

நாயகி ப்ரியா பவானி சங்கர் அழகு தேவதையாக காட்சியளித்திருந்தார். நடிப்பிலும் டாப் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படம் முழுவதும் யோகிபாபு வலம் வந்திருக்கிறார். ;அருண் விஜய் கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம் இவருடையது. பல இடங்களில் கதையை நகர்த்திச் சென்றுள்ளார். ஹரி படங்களில் வழக்கமாக வரும் சூரியை தவிர்த்து யோகிபாபுவை முயற்சி செய்தபோதும் காமெடி காட்சிகளில் பயன்தரவில்லை என்பது தான் நிதர்சனம்.

இயக்குனர் ஹரி, காமெடி காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தலாம். ஜி வி பிரகாஷின் இசையில் பின்னணி இசை மிரட்டல் தான். பாடல்கள் சுமார் ரகம் தான்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு வேகம் கொடுத்திருக்கிறது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் படுவேகம் கொண்டிருக்கும் இந்த யானை.

யானை – மதம் பிடித்த காவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *