ஊரடங்கு நீடிக்குமா? – நிபுணர் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

கொரோனா பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இடையிடையே பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும், பள்ளிகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும், மின்சார இரயில்கள் இயக்கவும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதிப்பதற்காக இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும், பல்வேறு புதிய தளர்வுகளை வழங்குவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, தியேட்டர்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும், மாலை 3.30 மணிக்கு ரங்கராஜன் குழு அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலஅமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *