லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்து, JD-ஜெரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் “தி லெஜெண்ட்”. இப்படத்தில், விஜய் குமார், பிரபு, நாசர், ஊர்வசி ரோட்டிலா, மறைந்த நடிகர் பத்ம ஸ்ரீ விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்தின் திரைவிமர்சனத்தை இப்போது காணலாம்.
இப்படத்தின் விமர்சனத்தில் அவ்வப்போது “வைகை புயல் வடிவேலு” வந்து செல்வார்.
கதைப்படி..,
உலகில் மிக பிரபலமான விஞ்ஞானியாக வருகிறார் சரவணன். உலகில் பல நிறுவனங்கள் மற்றும் பல நாடுகள் இவரை அழைத்தும் தன் நாட்டு மக்களுக்காக மட்டும் தான் இனி பணியாற்ற போகிறேன் என்று தனது ஊருக்கு வருகிறார்.
சிறு வயது நண்பன் ரோபோ ஷங்கர் தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தலைமுறை தலைமுறையாக சக்கரை வியாதியால் பாதிக்க பட்டு வருகிறோம் என்று தன் துயரங்களை பகிர்ந்துக் கொள்கிறார்.
அதன் பின், ரோபோ ஷங்கர் இறந்து போக நாட்டு மக்களின் கஷ்டத்தை தீர்க்கவும் நண்பனுக்காகவும் சக்கரை நோய்க்கான மருந்துகளை கண்டு பிடிக்க ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.
தொழில் சார்ந்த எதிரிகள் இவரை எதிர்க்க அந்த விபத்தில் சரவணனின் மனைவி இறந்து விடுகிறார். எல்லா தடைகளையும் மீறி மருந்தை கண்டுபிடித்தாரா? எதிரிகளை என்ன செய்தார்? உடன் இருந்த துரோகிகள் யாரென அறிந்தாரா? என்பது மீதிக் கதை…
ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என்ற எண்ணத்துடன் தான் இப்படத்தை எடுக்க முன்வந்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.
இப்ப நான் என்ன உங்க கிட்ட சொல்றது?? என்ற கேள்வி தாங்க… அந்த அளவிற்கு அறத்து பழசான கதை. ரஜினியின் சிவாஜி படத்தை பார்த்த ஒரு எண்ணம். தீடிரென எங்க வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர் அவதாரம், சர்க்கார் விஜய், தேறி கிளைமாக்ஸ் சண்டை என பல படங்களின் இன்ஸ்பிரஷனில் உருவாகியுள்ளது “தி லெஜெண்ட்”.
முதல் படம் என்ற காரணத்தினால் சரவணனின் நடிப்பு அமெட்சூராக உள்ளது. அடுத்தடுத்து படங்களில் தேர்ச்சி அடைவார் என்று நம்புவோம்.
“என்னங்க தரையில எடுத்ததெல்லாம் திரையில லைவா வருது” என்பது போன்று, திரையில் இருந்த நாசர் தரையில் வருவார்.
ஹாரிஸின் இசை பற்றி கருத்தில்லை. பல படங்களின் பாடல்களை சற்று டியூன் செய்து இவரின் இசை முத்திரை பதித்துக் கொண்டார்.
இது தான் கரெக்டான சான்ஸ் இதை விட்ட வேற கிடைக்காது என்று JD-ஜெரி இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளாமல் தவறவிட்டு விட்டனர். பழைய கதை, மந்தமான திரைக்கதை, சரியாக பயன்படுத்தாத நட்சத்திர பட்டாளங்கள் அடிக்கடி கருத்து பேசும் கதாநாயகன் என அனைத்தும் படத்தின் பலவீனங்கள்.
டேய், என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே என்று ஒரு முறை லெஜெண்ட் சரவணன் சிந்தித்திருந்தால் கூட படம் சற்று சிறப்பாக அமைந்திருக்கும்.
கடுப்பேத்தும் ரோபோ ஷங்கரின் கதாபாத்திரத்தை விரைவாக தீர்த்துக் கட்டியது தான் படத்தின் பலம்.
அறிமுக நடிகர், நம்ம அண்ணாச்சி என அவருக்காக ஒரு முறை இப்படத்தை பார்க்கலாம்.
தி லெஜெண்ட் – மக்களுக்காக சரவணன் மருந்து கண்டுபிடித்தாரோ இல்லையோ. உங்களை காக்க மருந்து உங்கள் கையில்.