மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்? என இயக்குனரிடம் கேட்ட குழந்தை
தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.
திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருந்தது. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன்.
இயக்குநர் டீகே பேசுகையில்,
இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்.
நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ‘காட்டேரி’ வெளியாகி, ரசிகர்களை சந்தித்து, வெற்றி பெறும்.” என்றார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்,
சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நடிகர் வைபவ் பேசுகையில்,
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் பெரிய படம் செய்கிறோம் என்றார். ஆனால் இத்தனை நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இந்த படத்தில் இயக்குநர் டீகே மூலம் நிறைவேறியது. .
நடிகை வரலட்சுமி தற்போது மெலிந்து விட்டார். அவருடைய பேச்சும் தற்போது நிதானமாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடக்கத்தில் அவர் வேகமாக பேசுவார். எனக்குப் புரியாது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில்,
காட்டேரி படத்துடன் நான்காண்டு கால அனுபவம் எனக்கிருக்கிறது. என்னுடைய மனைவிக்கு பிறகு நீண்ட செய்தியை அனுப்புவது இயக்குநர் டீகே தான். அதில் ‘உங்களுக்கு நல்ல நேரமே என்னுடைய படத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்’ என்பது கூட இருக்கும். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நல்ல நேரம் தொடங்கிய பிறகுதான் இந்த ‘காட்டேரி’ வெளியாகிறது.