தண்டட்டி விமர்சனம் – (4/5);

 

பசுபதி, ரோஹிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி நடிப்பில் ராம் சங்கையா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “தண்டட்டி”.

கதைப்படி,

தேனி மாவட்டத்தில் கிடாரிப்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மூதாட்டியான ரோஹிணி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

ஒரு நாள் ரோகிணி காணாமல் போய்விடவே அவரை கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம் புகாரளிக்கப்படுகிறது. போலீசான பசுபதி, மூதாட்டி ரோகிணியை தேடிக்கண்டு பிடிக்கிறார்.

ஆனால், உடல் நலப்பிரச்சினையால் அவர் இறந்து விடுகிறார். பின்னர் ரோகிணியின் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. அப்போது பேராசை பிடித்த பிள்ளைகள் தாய் இறந்த கவலை கூட இல்லாமல் அவர் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால், திடீரென்று அந்த தண்டட்டி காணாமல் போய்விடுகிறது.

இறுதியில் ரோகிணி எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்? தண்டட்டி எப்படி காணாமல் போனது? பசுபதி தண்டட்டியை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.


வித்யாசமான நடிப்பில், போலீஸ் கதாபாத்திரத்தில் நகைச்சுவையாகவும், வலி நிறைந்த ஒரு வலுவான பாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ளார் பசுபதி.

இக்கதையின் முழு சுமையும் அவர் ஒருவரே சுமந்து சென்று சிறப்பித்துள்ளார். கிராம மக்களிடம் மாட்டி தவிக்கும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவையே.

கிட்டத்தட்ட பாதி படத்திற்கு மேல் பிணமாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார் ரோஹிணி. ட்விஸ்ட் காட்சியில் அவரின் நடிப்பு அழுகையை தூண்டி பாராட்டை பெறுகிறது.

அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா பூவிதா, தீபா சங்கர், ஜானகி, செம்மலர் அன்னம் என உடன் நடித்த அனைவரும் அவர்களின் பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் ராம் சங்கையா தண்டட்டி பின்னால் இருக்கும் கதையை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். வலுவான திரைக்கதை மூலம் நம்மை ரசிக்கவும் சில காட்சிகளை உணரவும் வைத்துள்ளார்.

எதார்த்தமான கிராமத்து கதையை மண் மணம் மாறாமல் இயக்கியுள்ளார் ராம்.

அந்த தண்டட்டியை திருடியது யார் என்று அவர்கள் ரிவீல் செய்யும் காட்சி நம்மை ஏதோ செய்துவிடும். மாறுபட்ட கிளைமாக்ஸ் அமைத்து நம்மை கவர்ந்துள்ளார் இயக்குனர் ராம்.

கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கிராமத்து அழகை தன் ஒளிப்பதிவு மூலம் மிகவும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

இவர்களை எல்லாம் தாண்டி, கதை நடக்கும் முழு வீட்டையும் செட் அமைத்து பிரம்மாண்ட படுத்திய கலை இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *