தேர்வு எழுதும் மாணவர்கள் மாயநதி படத்தை பார்க்க வேண்டும்” – அபிசரவணன்

மாயாநதி படத்துக்காக ஆட்டோ ஒட்டி சம்பாதித்த அபிசரவணன் 

“தேர்வு எழுதும் மாணவர்கள் மாயநதி படத்தை பார்க்க வேண்டும்” ; அபிசரவணன் வலியுறுத்தல் 

 
அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன் ; மாயநதி கலாட்டா

“சமூக சேவை தொடரும்” ; இயக்குநர் அமீருக்கு அபிசரவணன் பதில்

டாக்டர் அசோக் தியாகராஜன் டைரக்ஷனில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாயநதி. பவதாரணி இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு காதல் பற்றிய குழப்பங்கள் இருக்கும். அதைத்தாண்டி லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டிய கடமையும் இருக்கும். இந்த காலகட்டத்தை அவர்கள் எப்படி எதிர்கொண்டு கடந்து செல்லவேண்டும் என சொல்கிற ஒரு படமாக இது உருவாகி இருக்கிறது என்கிறார் படத்தின் நாயகன் அபி சரவணன். இந்த படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மிடம் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

“இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ள அசோக் தியாகராஜன் ஒரு மருத்துவர். ஆனாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தாலும் இந்த படத்தின் மூலம் மாணவர்களுக்கு பயன்படும் ஒரு முக்கியமான கருத்தை எப்படியேனும் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலாலும் தான் இந்த படத்தை எடுத்துள்ளார். இப்படி ஒரு படம் இவர் எடுக்க போகிறார் என இயக்குநர் சுப்பிரமணியம் சிவா மற்றும் என் மக்கள் தொடர்பாளர் KSK செல்வா மூலமாக தகவல் கிடைத்தது.

இயக்குனர் வைத்த ஆடிசனில் நான் ஓகே ஆனதுமே என்னிடம் இந்த படத்தில் ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். அதனால் உங்களுடைய எடையை கிட்டத்தட்ட 20 கிலோ குறைக்க வேண்டும் எனக் கூறினார் இயக்குனர். அவரிடம் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டு அரிசி, பால் போன்ற உணவுகளை தொடமால் வெறும் சிக்கன் மட்டுமே சாப்பிட்டு இரண்டு மாதத்தில் 20 கிலோ எடையை குறைத்தேன்.

இந்த படத்தில் எனக்கு ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரம் என்பதால் மதுரைக்கு சென்று அங்கே என்னுடைய பால்ய கால நண்பரான  ஆட்டோ மாரி என்பவரிடம் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டேன். ஆர்டிஓ அலுவலகத்தில் முறைப்படி ஆட்டோ ஓட்டுவதற்கு உரிமம் பெற்றேன். மதுரையிலேயே சுமார் 15 நாட்கள் ஆட்டோ ஓட்டிவிட்டு, இந்தக் கதையின் களமான மாயவரம் பகுதியிலும் சுமார் இருபது நாட்கள் ஆட்டோ ஓட்டினேன். அதிலேயே தினசரி ஆயிரம் ரூபாய் சம்பாதித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி ஆட்டோ ஒட்டிய சமயங்களில் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், அன்றாட பிரச்சினைகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது.  மேலும் படப்பிடிப்பின் போதும் இது எனக்கு ரொம்பவே கைகொடுத்தது.

படத்தின் கதாநாயகி மட்டுமல்ல, படத்திற்காக பயன்படுத்தப்பட்ட கேமரா உள்ளிட்ட விலைமதிப்பில்லாத பொருள்களையும் என்னை நம்பி ஆட்டோவில் பயணிக்க அனுப்பி வைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல சில காட்சிகளில் கேமராவை ஆட்டோவின் முன்பாக பொருத்தி விடுவார்கள். பின்னிருக்கையில் கதாநாயகி அமர்ந்திருக்கும் சில காட்சிகளை படமாக்கும்போது நான் இடைஞ்சலாக இருக்க கூடாது என்று ஆட்டோவின் கீழ்பகுதியில் அமர்ந்தபடியே ஆட்டோவை ஓட்டினேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆளே இல்லாமல் ஒரு ஆட்டோ வருவது போன்ற குழப்பங்கள் ஏற்பட்ட சுவாரசியமான நிகழ்வுகள் எல்லாம் நடந்தது. இதற்காக பயிற்சி பெற்ற ஆட்டோ ஓட்டுநரை அழைக்கலாம் என்று மற்றவர்கள் கூறியதை மறுத்துவிட்டு நானே அந்த வேலையை திறம்பட செய்து முடித்தேன்.

ஒரு காட்சியின் போது என்னுடன் ஆட்டோவில் பயணிக்கும் நாயகி வெண்பாவை, எனது ஆட்டோ ரிப்பேர் ஆனதால் எதிரில் வரும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட தொலைவில் கேமராக்கள் வைத்து எடுக்கப்பட்ட காட்சி இது. என்னுடைய ஆட்டோவிலும் ஒரு கேமரா வைக்கப்பட்டிருந்தது. வெண்பாவை இறக்கிவிட்டு அடுத்ததாக எதிரில் ஒரு ஆட்டோ வந்ததும் அதில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தேன். காட்சி முடிந்தது என நினைத்தால் அடுத்த சில நொடிகளிலேயே உதவி இயக்குனர்கள் சிலர் கூச்சலிட்டபடி அந்த ஆட்டோவை தொடர்ந்து ஓடினார்கள். என்னவென்று விசாரித்தபோது தான் நாங்கள் படப்பிடிப்பிற்காக ஏற்பாடு செய்திருந்த இன்னொரு ஆட்டோ சரியான சமயத்திற்கு வர தவறியதும் அந்த நேரத்தில் எதேச்சையாக அந்தப் பக்கம் படப்பிடிப்பு நடக்கும் விபரம் தெரியாமல் இன்னொரு ஆட்டோ வந்ததும் அதில் தவறுதலாக கதாநாயகியை ஏற்றிவிட்டதும் பின்னர் தான் தெரிய வந்தது. இருந்தாலும் கதாநாயகி மீது இவ்வளவு கோபம் உனக்கு இருக்க கூடாது.. இப்படியா செய்வாய் என அன்று முழுவதும் என்னை படக்குழுவினர் அனைவரும் கிண்டலடித்ததும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

இந்த படத்தில் நாயகி வெண்பாவுக்கும் எனக்கும் ஒரு காதல் ஒட்டாமல் ஓடிக்கொண்டிருக்கும். படத்தில் அவரது கதாபாத்திரம் போலத்தான் நிஜத்திலும் அவர்.. நடிப்பு உண்டு, தன் வேலை உண்டு என இருப்பார். ஆனால் மிகத் திறமையான நடிகை.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாஸ் தேவாம்ஷம் பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யர்.. குறைந்த பட்ஜெட்டில் எப்படி தரமான படத்தை எடுக்க வேண்டும் என்கிற வித்தை தெரிந்தவர். ஒரு இடத்தில் கிரேன் வைத்து காட்சிகளை படமாக்க முடியாவிட்டால் கவலையே படமாட்டார். சரசரவென அருகில் இருக்கும் மரத்தில் ஏறி விடுவார். அதேபோல நானும் அப்புக்குட்டியும் இணைந்து குளத்தில் குளிக்கும் ஒரு காட்சியை படமாக்கியபோது குளத்தின் ஆழம் எல்லாம் என்னவென்று கவலைப்படாமல் மடமடவென ஒரு இறங்கி ஒரு தக்கையை வைத்து அதில் மிதந்தபடி காட்சிகளை படமாக்கினார்.

இந்த படத்தின் இயக்குனர் அசோக் தியாகராஜன் அடிப்படையில் ஒரு மருத்துவர். தினசரி 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒரு வேலையை கொஞ்சம் நாள் ஒதுக்கி வைத்துவிட்டு இப்படி ஒரு முக்கியமான கருத்தை சொல்வதற்காகவே இந்த படத்தை எடுத்தாக வேண்டுமென வந்திருக்கிறார். மாயவரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க ஒரு மிகப் பெரிய கூட்டம் கூடியிருக்கும். ஆனால் அது என்னை போன்ற நடிகர்களை பார்க்க வந்த கூட்டம் அல்ல. டாக்டர் அசோக் தியாகராஜனை தேடி வந்த கூட்டம். எப்போது இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் நீங்கள் மருத்துவமனைக்கு வருகிறீர்கள் என அன்பாக விசாரிக்க வந்த கூட்டம். அந்த அளவிற்கு மிகப்பெரிய நற்பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் அசோக் தியாகராஜன்.

காளி வெங்கட், ரோபோ சங்கர், சூரி இவர்களுடன் எல்லாம் நடித்துவிட்டேன். தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அது இந்தப் படத்தில் நிறைவேறி விட்டது. நானும் அப்புக்குட்டியும் சாப்பிடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் காட்சியை படமாக்குவதற்கு முன்பே தோசையை சுட்டுப்போட சுட்டுப்போட அப்புக்குட்டி அனைத்தையும் காலி பண்ணிவிட்டார். பிறகு ஷாட் போகும்போது மாவு இல்லாததால் பக்கத்து வீட்டில் மாவு வாங்கி தோசை ஊற்றி காட்சிகளை படமாக்கினார்கள்.

இந்த படத்தை நாங்கள் இந்த பிப்ரவரி மாதத்திற்குள் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. காரணம் இது பள்ளி மாணவர்களை, அவர்களுக்கு பள்ளிக் காலத்தில் ஏற்படும் ஒரு இனக்கவர்ச்சி, இனம்புரியாத காதலைப் பற்றி சொல்லும் படம். குறிப்பாக தேர்வு சமயங்களில் அவர்களுக்கு இதுபோன்ற குழப்பங்கள் நிறையவே இருக்கும்.  ஒருபக்கம் காதல் இன்னொரு பக்கம் படிப்பு என ஒரு ஊசலாட்டம் இருக்கும். இந்த படத்தில் அப்படி படிப்பை முழுமூச்சாக நினைக்கும் ஒரு நாயகி, அவளை ஊக்கப்படுத்தி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டுவர துடிக்கும் ஒரு தகப்பன், அவள் வாழ்வில் எதிர்பாராமல் குறுக்கிடும் ஒரு ஆட்டோ ஓட்டுனர், அவனுடன் அவளுக்கு ஏற்படும் தவிர்க்க முடியாத ஒரு காதல், இதையெல்லாம் கடந்து அவளால் தனது படிப்பில் சாதிக்க முடிந்ததா, காதலை எப்படி எதிர்கொள்ள முடிந்தது, தாய் இல்லாமல் அவளை வளர்த்த தந்தை மகளின் இந்த காதலை எப்படி எதிர்கொள்கிறார் என பள்ளி மாணவர்கள் பலர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மிக அழகான வழியில் ஒரு தீர்வை சொல்லி இருக்கிறோம்.

அதனால் இந்த படத்தை நிச்சயம் தேர்வு எழுதும் மாணவர்கள் பார்க்க வேண்டும். அவர்களை அவர்களது பெற்றோர்களே அழைத்து சென்று இந்த படத்தை காட்டவேண்டும். அப்படி மாணவர்களை பிரதானப்படுத்தி, மாணவர்களின் சீருடைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படுத்தாத விதமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக் தியாகராஜன்.  குறிப்பாக இந்த படத்தில் காதல் காட்சிகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பள்ளி மாணவர்களை பற்றி மிக கண்ணியமாக உருவாகியிருக்கிறது இந்தப்படம். மற்ற படங்களுக்கு அவர்கள் வெளியிடும் தேதியை தீர்மானிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்தே, வரும் ஜனவரி 31 இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம்” என்கிறார் அபிசரவணன்..

அபிசரவணனை பொருத்தவரை, அதிக அளவில் சமூக சேவை செய்து வருபவர்.. சமூக பிரச்சனைகளில் ஈடுபாடு காட்டி வருபவர். ஆனால் சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் பேசிய இயக்குனர் அமீர், சமூகப்பிரச்சினைகளில் ஹீரோக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறியிருந்தார். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என அபிசரவணனிடம் கேட்டோம்.

“என்னை போன்ற இளம் நடிகர்கள் மீது கொண்ட அக்கறையினால் தான் இயக்குனர் அமீர் அவ்வாறு கூறி இருந்தார் என்பதை என்னால் உணர முடிகிறது.அமீர் அண்ணனின் அன்பு கட்டளையை ஏற்று இனி சமூக பிரச்சினைகளில் அதிகம் ஈடுபடாமல் இனி எனது கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே  இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன். அதே சமயம் எனது சமூக சேவை பணிகள் வழக்கம் போல தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்பதையும் இந்த இடத்தில் நான் அழுத்தமாக பதிவு செய்கிறேன்” என அமீரின் ஆலோசனையை புறந்தள்ளாமல் பக்குவமாக பதில் கூறுகிறார் அபிசரவணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *