கதை திருட்டு விவகாரம் – ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட ‘ஹீரோ’
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஹீரோ’. மித்ரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ‘ஹீரோ’ பட கதைத் திருட்டு சம்பந்தமாக இயக்குனர் போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இடை காலத்தடை வழங்கியது. அதன்படி, வேறு மொழிகளில் வெளியிட இடைக்காலத்தடை விதித்தும், மொழிமாற்றம் [டப்பிங்] மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால், தடையையும் மீறி தெலுங்கில் ‘சக்தி’ என்ற பெயரில் ‘ஹீரோ’ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 20-ம் தேதி தெலுங்குத் திரையுலகில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை.
இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் அமேசான் பிரைம் என்ற இணையதளத்தில் ‘ஹீரோ’ மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்ட ‘சக்தி’ திரைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து இயக்குனர் போஸ்கோ கூறும்போது, ”ஹீரோ” திரைப்படம் எந்த ஒரு வேற்று மொழியிலும் எந்த வகையிலும் வெளியிடுவதற்கும் மற்றும் ஹீரோ திரைப்படத்தை டிஜிட்டல், இணையதளம் மற்றும் சாட்லைட் தொலைக்காட்சி என எதிலும் வெளியாவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ள நிலையில், திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து அமேசான் பிரைமுக்கு இமெயில் மூலம் நீதிமன்றத்தின் நகலை அனுப்பினேன். இதைப் பார்த்த அவர்கள் ஆன்லைனில் இருந்து படத்தை நீக்கிவிட்டார்கள். விரைவில் நீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார்.