சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல், பாண்டி, சுப்ரமணிய சிவா நடிப்பில், A.L.விஜய் கதையில் தயாரிப்பில், ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் உருவாகி டிசம்பர் 3ம் தேதி ZEE5 ஓடிடி தலத்தில் வெளியாகும் படம் “சித்திரைச் செவ்வானம்‘.
சிறு வயதில் அம்மாவை மருத்துவ வசதி இல்லாத காரணத்தினால் இழந்த மகள், தனது அப்பாவின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்து, மருத்துவம் படிப்பதற்காக டவுனுக்கு சென்று விடுதியில் தங்கி படிக்கிறாள், அங்கு இருக்கும் ஒரு சில செல்வாக்குடைய முக்கிய புள்ளிகளின் மகன்களால், அவளின் குளியல் வீடியோ பரவுகிறது. அன்று இறவு காணாமல் போகிறாள் சமுத்திரக்கனியின் செல்ல மகளான பூஜா கண்ணன்.
சமுத்திரக்கனி ஒரு பக்கம் தேட மற்றொரு பக்கம் ரீமாவின் தலைமையில் போலீஸ் தேடுகிறது. பூஜா கிடைத்தாலா? அவளின் வாழக்கை என்னானது? அப்பாவாகிய சமுத்திரகனியின் கோவம் எவ்வாறு வெளிப்பட்டது? என்பது மீதி கதை…
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பிச்சி உதறுபவர் சமுத்திரக்கனி இந்த படத்தில் அது ஒருபடி மேலே சென்றிருக்கிறது.
பூஜா கண்ணனுடைய நடிப்பு இது உண்மையாகவே முதல் படம் தானா? என்று ஆச்சர்ய படும் வகையறா. அவர் வந்த அனைத்து காட்சியும் ரசிக்கும் படியாகவும், அவரின் கதாபாத்திர வலியை நாம் உணரும் வகையிலும் இருந்தது.
ரீமா கல்லிங்கலுக்கு ஒரு புதிய கதாபாத்திரம், அதை நடித்த வண்ணம் கச்சிதம்.
படத்தில் வரும் அனைத்து புதுமுக இளைஞர்களும் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் வெங்கட் கிராமத்தின் அழகையும், அப்பா மகளின் உறவையும் அழகாக காட்டியிருக்கிறார்.
சில்வா இயக்கத்தில் இந்த படம் அவருக்குள் இருந்த ஒரு ரசனையை வெளிப்படுத்தியிருக்கிறது, அவரின் இயக்கம் பிரமாதம்.
A.L. விஜய் கதையில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம், படம் ஆரம்பித்தது முதல் நம்மை ஓர் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும், ஆனால் அது அத்தனையும் கிளைமாக்ஸில் நம்மை ஏமாற்றிவிடும்.
சாம் C.S. இசை தேவைப்பட்ட இடங்களில் தேவைப்பட்டதை கொடுத்திருக்கிறது.
சில காட்சிகள் பாபநாசம், ஈசன் போன்ற படங்களின் சாயலில் இருந்தாலும் அது பெரிதும் படத்தை பாதிக்கவில்லை.
முதல் பாதியில் எதார்த்தமான பாதையில் போகும் படம் இரண்டாம் பாதியில் தனது சினிமாட்டிக் வேலையை காட்டிவிடும்.
படத்தின் முடிவு சிறிது ஏற்று கொள்ள முடியாத வகையிலும் தவறான முடிவாகவும் இருந்தது வருத்தம்.
படம் ஆரம்பித்தது முதல் அடிக்கடி நம்மை கண்ணீர் சிந்த வைக்கும் காட்சிகள். அழகான அப்பா மகளின் உறவு படத்தின் முக்கிய பலம்.
பெண்களை பெற்ற அனைத்து அப்பாக்களும் நிச்சயம் கண்ணீர் சிந்துவர். ஆழமான வலிகளை கொண்ட இந்த படம், நல்ல சமுதாய கருத்தையும் கொடுத்திருக்கிறது.
சித்திரைச் செவ்வானம் – பெண்களை பெற்ற அப்பாக்களுக்கானது.