மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ வெற்றிக்காக மோகன் ராஜா எடுத்த ரிஸ்க்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் ‘காட்ஃபாதர்’ வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி இயக்குநராக பணியாற்றி வரும் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி, தெலுங்கில் வெளியாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட் ஃபாதர்’. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமுத்திரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையே நேற்று ( அக்டோபர் 5 ஆம் தேதி) வெளியானது. படத்தை பார்த்த மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ரசிகர்கள், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மேல் மாஸான காட்சிகளும், சண்டை காட்சிகளும் இடம் பெற்றதால் படத்தை கொண்டாட தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த வெற்றி எளிதாக கிடைத்த வெற்றி அல்ல என்கிறார்கள் திரையுலகினர். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிபர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான் காட்ஃபாதர். பொதுவாக ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்களை மற்றொரு மொழியில் ரீமேக் செய்யும் போது, பெரும்பாலான காட்சிகளை அதன் கோணங்களுடன் பிரதி எடுப்பார்கள். ஆனால் இதில் தனித்துவமான நிபுணத்துவம் பெற்றிருக்கும் இயக்குநர் மோகன் ராஜா, ‘லூசிபர்’ திரைப்படத்தின் ஜீவனுள்ள கதை மற்றும் அதற்கான காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு, தெலுங்கு ரசிகர்களின் உணர்வுகளுக்கு ஏற்பவும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இமேஜிற்கு ஏற்றாற்போல் சில காட்சிகளை இணைத்தும் படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. இதற்காகவே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். இதனை தெலுங்கு திரை உலகின் மூத்த விமர்சகர்களும் ஆமோதித்து வழிமொழிகிறார்கள்.

வேறு சிலர், ”ஒரு சூப்பர் ஹிட் படத்தை மறு உருவாக்கம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. அசலான படைப்பை விட மேலான படைப்பை வழங்குவது தான் மோகன் ராஜாவின் தனித்துவமான பாணி. அண்மைக்காலமாக இந்திய திரை உலகில் ஒரு நல்ல ரீமேக் படைப்பை வழங்குவது தான் சவாலான பணியாக உள்ளது. அதிலும் டிஜிட்டல் தளங்கள் மக்களின் வரவேற்பை பெற்ற பிறகு, ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை மற்றொரு மொழியில் மறு உருவாக்கம் செய்து வெற்றி பெற வைப்பது என்பது அசாதாரணமான பணி. அதனை மோகன் ராஜா தனக்கே உரிய பாணியில் சிறப்பாக செய்து, காட்ஃபாதரை வெற்றி பெற செய்திருக்கிறார்” என குறிப்பிடுகிறார்கள். இதனை தெலுங்கு திரை உலகினரும் சரி என்று சொல்கிறார்கள்.

சிரஞ்சீவி நடிப்பில் அவரது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் ‘காட் ஃபாதர்’. இதனை வெற்றி பெற செய்திருப்பதால் படத்தின் இயக்குநரான மோகன் ராஜாவிற்கு தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகிலிருந்தும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ திரைப்படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இயக்குநர் மோகன் ராஜா நட்சத்திர இயக்குநர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *