இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “சினம்”. நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற வித்தியாசமான கதைக் களங்களை கையாண்ட இவர் தற்போது, சஸ்பென்ஸ் திரில்லர் கதையை எப்படி உருவாக்கியுள்ளார் என்பதை விமர்சனமதில் காணலாம்.
கதைப்படி,
நேர்மையான சப்-இன்ஸ்பெக்டராக ரவுடிகளை வெளுத்து வாங்குகிறார் பாரி வெங்கட்(அருண்விஜய்). ஒருநாள் பாரி வெங்கட்டின் மனைவியான மது (பாலக் லால்வானி) ஊருக்கு சென்று திரும்புகிறார். அவரை அழைத்து வர காத்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் பாலக் லால்வானி வராததால் அவரைத் தேடி அலைகிறார்.
இவ்வழக்கை கையில் எடுக்கும், இன்ஸ்பெக்டர் (சித்து சங்கர்) பாரி வெங்கட்டை பழி வாங்கும் நோக்கத்தில், பாலக் லால்வானி வடமாநிலத்தை சேர்ந்தவருடன் கள்ளக்காதல் என அவ்வழக்கை ஜோடித்து பாரியின் சினத்திற்கு ஆளாகிறார். அதன்பின், இவ்வழக்கு பாரியிடம் வர மனைவியைக் கண்டுபிடித்தாரா? வட மாநிலத்தவர் யார்? என்பது மீதிக்கதை…
மூவி ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஆர்.விஜய்குமாரின் முதல் தயாரிப்பு “சினம்”. சரியான கதையை தான் அவர் தயாரித்துள்ளார்.
ஆக்ஷன் கதையில் அதகளம் செய்வது அருண்விஜய்க்கு கை வந்த கலை. இந்தப் படத்திலும் மிரட்டியுள்ளார் அருண்விஜய். அதுவும், குற்றவாளியை கண்டுபிடித்த பின் வரும் காட்சிகள் புல்லரிக்கச் செய்யும்.
பாலக் லால்வானி சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், நம் கவனத்தை ஈர்த்து வைத்திருப்பார். மனைவியாக ரொமான்டிக் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார்.
சமீபத்தில் காளி வெங்கட் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்கள் வலுவாக உள்ளன. அந்த வகையில் இப்படத்திலும் மனதில் நிற்கக்கூடிய கதாபாத்திரமே.
காவல்துறையில் பணிபுரிபவருக்கே பிரச்சனை என்று வந்து விட்டால் மோசமாக தான் கேஸை ஜோடிப்போம் என்று காவல்துறைக்கே உள்ள நக்கலில் தனது நடிப்பால் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கோவத்திற்கும் ஆளாகிறார் நடிகர் சித்து சங்கர்.
ஆர்.என்.ஆர்.மனோகர், தமிழ் மற்றும் உடன் நடித்த கலைஞர்கள் அளவான நடிப்பை நடித்து படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளனர்.
ஜி.என்.ஆர்.குமரவேலன் கதைத் தேர்வு பாராட்டத்தக்கது. பரபரப்பான திரைக்கதை, தேவையான காட்சிகள் என படத்தை செதுக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் ஷபீர் பாடல்கள் ஹிட் ரகம். ஆனால், பின்னணியில் வரும் விசில் சத்தம் படம் முழுக்க வருவது படத்தின் மீதான கவனத்தை குறைக்கிறது.
சினம் – தேவையான குணமே!