SHOOT THE KURUVI திரைவிமர்சனம் – (3/5)

ஷா ரா, விஜே ஆஷிக், அர்ஜை மற்றும் சிலர் நடிப்பில் உருவாகி “SHORTFLIX” ஓடிடி தலத்தில் வெளியாகியுள்ள படம் “SHOOT THE KURUVI”. இந்த குறும்படத்தை மதிவாணன் இயக்கியுள்ளார்.

கதைப்படி,

இரண்டு கதாபாத்திரங்களின் தனிப்பட்ட கதையை ஒரு சமயத்தில் இணைக்கும்படியாக இக்கதை ஆரம்பிக்கிறது. அதில் ஒருவர் கேங்க்ஸ்டர் அர்ஜை, இரண்டாவதாக வருபவர் ஆஷிக். இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது இப்படத்தின் கதை.

சிறுவயதில் இருந்து தனது திறமையாலும், பலத்தாலும் பெரும் கேங்க்ஸ்டராக உருவெடுத்து வந்து நிற்பவர் அர்ஜை. காவல்துறையால் கூட நெருங்க முடியாத ஒரு அசுர அவர். அர்ஜையின் கதாபாத்திர பெயர் “குருவி ராஜா”.

இன்னொருபுறம், தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கிறார் ஆஷிக். அவரது கனவில் தோன்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, எப்படியும் சாகத்தான் போகிறாய். 5 டார்கெட்டை வைத்து அதை முடித்து விடு என்கிறார்.

அந்த டார்கெட் நடக்கும் போது, எதிர்பாராதவிதமாக அர்ஜையை அவர் கேங்க்ஸ்டர் என்று அறியாமலேயே தாக்கி விடுகிறார் ஆஷிக்.

அதன்பிறகு, அர்ஜை மற்றும் ஆஷிக் வாழ்வில் என்ன நடந்தது? அந்த 5 டார்கெட்டுகள் என்ன? என்பது மீதிக்கதை.

தற்போதுள்ள காலகட்டத்தில் ஷார்ட் பிலிமாக எடுக்கவேண்டிய கதைகள் பலவற்றை காட்டாயத்தினால் 2 மணி நேர படமாக அமைத்து தட்டுத்தடுமாறி வருகின்றனர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சில இயக்குனர்கள்.

அப்படி பட்ட சூழ்நிலையில் ஷார்ட்பிலிமை நேர்த்தியாக அமைத்து ஓடிடியில் வெளியிட்டு இயக்குனர்களை தூக்கிவிடும் ”SHORTFLIX”-ன் முயற்சி பாராட்டத்தக்கது.

காமெடி கதாபத்திரத்தில் வழக்கம் போல் நம்மை சிரிக்கவைத்திருக்கிறார் ஷா ரா.

விஜே ஆஷிக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் தன்னை நிலைநாட்டியுள்ளார் என்று சொல்லலாம். அவர் பயப்படும் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக இருந்தது.

வில்லன் கதாபாத்திரம் என்றால் அர்ஜை அவர்களை தேர்வு செய்யலாம். இதற்கு முன் அவர் நடித்த படங்களில் ஆங்காங்கே ஓவர் ஆக்டிங் எட்டி பார்த்திருக்கும். ஆனால் இப்படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை ரசிக்கவைத்திருக்கிறார்.

காமெடி கதை, மிகுந்த பொருட்செலவு, ஒரு சில பாத்திரங்கள் அளவான வசனங்கள், கிளைமாக்சில் வரும் ட்விஸ்ட் என அனைத்தையும் பக்குவமாக கையாண்டு வெற்றியடைந்துள்ளார் இயக்குனர் மதிவாணன்.

படத்தின் ஒளிப்பதிவு சிறப்பு. ஒரு சிறிய அறையில் நடக்கும் சண்டை காட்சியை கட்சிதமாக காட்சிப்படுத்தியுள்ளார் ப்ரிண்டன் சுஷாந்த்.

SHOOT THE KURUVI – காமெடி சரவெடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *