சர்தார் விமர்சனம் – (4.25/5)

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்தி, ராஷி கண்ணா, ராஜீஷா விஜயன், சங்கி பாண்டே நடிப்பில், PS மித்ரன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் “சர்தார்”. இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இரும்புத்திரை படத்தில் வங்கி கடன் பற்றிய ஒரு பிரச்சனையை படமாக்கி நாம் அனைவரையும் அச்சப்பட வைத்திருப்பார். அந்த அச்சமே நாம் அனைவரையும் விழிப்புணர்வு அடையச்செய்தது. அதே போல், அத்யாவசியத்தின் அச்சம் தான் “சர்தார்”.

கதைப்படி,

தண்ணீர் நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்த லைலாவை கொன்றுவிட கதை ஆரம்பமாகிறது. மேலும், அரசாங்க ஆவணம் ஒன்றை லைலா திருடியதனால் அவரை தேச துரோகி என்ற முத்திரை பதிக்கப்படுகிறது.

ஒரே நாடு ஒரே பைப் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதையும் நீர் குழாய்கள் மூலம் இணைத்து தனியார் நிறுவனம் ஒன்று தொழில் துவங்கவுள்ளது. ஏற்கனவே, சங்கி பாண்டே தலைமையிலான நிறுவனம் பல நாடுகளை நாசம் செய்திருந்த நிலையில். இந்தியாவிலும் தண்ணீரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைக்கிறார் சங்கி.

இது அனைத்தையும் தெரிந்து கொண்ட விஜி(கார்த்தி) எப்படி இந்த திட்டத்தை நிறுத்த உதவினார். விஜியின் தந்தையான சர்தார்(கார்த்தி)க்கும் இந்த திட்டத்திற்கும் என்ன சம்பந்தம். சர்தாரை தேச துரோகியாக மாற்றியது யார்? சங்கியின் சதியை நிறுத்தினரா சர்தார்? PS மித்ரனின் கருத்து என்ன? என்ற பல கேள்விகள் தான் சர்தார்.

வயதான தோற்றத்துடன் கார்த்தி நடித்திருக்கும் முதல் படம் இது. அந்த கதாபாத்திரம் கார்த்திக்கு கச்சிதம். சிறுத்தை படத்தில் இருந்து மாறுபட்ட போலீஸாகவும், மிரட்டலான ஹீரோவாகவும் கார்த்தி கலக்கியிருக்கிறார்.

ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா என இருவருக்கும் சிறிய கதாபாத்திரம் என்றாலும் வலுவானவை.

குட்டி ஹீரோ ரித்விக் பற்றி என்ன சொல்லுவது? அடுத்த கமல் ஹாசனா? சிலம்பரசனா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சங்கி பாண்டே பல இடங்களில் ஜாக்கி ஷெராப் போன்று உள்ளார். நடிப்பில் அசத்தல்.

கதை தேர்வு, தொய்வில்லாத திரைக்கதை, அளவான கதாபாத்திரம், கதைக்கு தேவையான நடிகர்களின் தேர்வு இது மொத்தமும் PS மித்ரனின் வெற்றி. பல பிரச்சனைகள் சமுதாயத்தில் நம் கண் முன்னே இருந்தாலும். இவர் அதை படமாக்கி காட்சி படுத்தியது அச்சமடைய வைத்துள்ளது.

மோடியின் பைப் லைன் திட்டத்தை ஒரு அடித்தளமாக வைத்தாரா? சங்கி பாண்டேவை அவரின் பெயருக்காகவே தேர்வு செய்தாரா? என்று இயக்குனருக்கு தான் தெரியும்.

ஜி வி பிரகாஷின் இசையா இது? என்று ஒரு கேள்வி. சுமாரான பாடல்களின், சவுண்டான பின்னணியும்.

சர்தார் – அத்யாவஸ்யத்தின் அச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *