”10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிப்பது மகிழ்ச்சி” -ப்ரியாமணி பரவசம்

 

 

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் ” DR 56 ”

ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் ” DR 56 ”
படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் A.N. பாலாஜி வெளியிடுகிறார். இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெடி. ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் இன்று நடந்தது.

நிகழ்ச்சியில் படத்தின் நாயகி ப்ரியாமணி பேசியதாவது:-

“ ‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம் ‘ DR 56 ’ என்பதால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்தக் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த, நடந்துகொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குனர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்துவிட்டு மிரண்டுபோன நான், ”நீங்க சொன்ன மாதிரியே இந்த படத்தை எடுத்துட்டா. நிச்சயமா பெரிய வெற்றி பெறும்”னு சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே படம் நல்லபடியாக வந்திருக்கு.

இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் ரொம்ப ரொம்ப முக்கியமான ரோல். சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே ப்ரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன்.

இது மருத்துவ மாஃபியா கும்பலை பற்றிய படம். இதில் ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறேன். இந்த கதையை எழுதி, தயாரித்து, நடிகராகவும் அறிமுகமாகும் ப்ரவீன், மிகச்சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். சமூகத்துக்கு தேவையான மெசேஜ் உள்ள இந்தப்படத்தை அக்கறையுடன் வெளியிடும் ஏ.என். பாலாஜி சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். பத்து வருடம் கழித்து நான் நடித்து வெளிவரும் படம் என்பதால் ரொம்பவே எதிர்பார்க்கிறேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன். அதுக்கு எல்லோருடைய ஆதரவும் தேவை”.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான ப்ரவீன் ரெடி பேசியதாவது :-

“இது எனக்கு முதல் படம்தான். ப்ரியாமணி நடிக்க சம்மதித்தப்பிறகே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தோம். ஒருவேளை அவர் நடிக்க மறுத்திருந்தால் இந்த படமே வந்திருக்காது. நம் வாழ்க்கையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் தொகுப்பே இந்தக் கதை. ‘ DR 56 ’ என்றால் படத்தின் நாயகன் 56 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு மாத்திரை போட வேண்டும். அப்போதுதான் அவன் உயிருடன் இருப்பான். அது ஏன்? எப்படி? என்று நீங்கள் கேட்டால் படம் பார்க்கும்போது அதை புரிந்துகொள்வீர்கள்.”என்றார்.

படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா பேசியபோது :

“இந்த கதையை ப்ரவீன்தான் எழுதினார். இது ஒரு யுனிவர்சல் சப்ஜக்ட். தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ப்ரவீன் மற்றும் ப்ரியாமணிக்கு எனது நன்றி”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *