“பார்ட்னர்” படத்தின் கதையை சொன்ன ஆதி;

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை வி சசிகுமார் மேற்கொண்டிருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

நடிகர் ஆதி பேசுகையில்,

” பாட்னர் படத்தின் கதையை இயக்குநர் மனோஜ் எனக்கு முதலில் போனில் தான் சொன்னார்.‌ ‘ஐந்து நிமிடத்தில் படத்தின் ஒன்லைனை சொல்லிவிடுகிறேன். பிடித்திருந்தால் கதையாக விவரிக்கிறேன்’ என்றார். ‘பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.. ரூம் மேட்ஸ்… மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக்கொள்வார்கள். குட் நைட். சொல்லி தூங்குகிறார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் பெஸ்ட் பிரண்ட்… அழகான ஃபிகராக மாறிவிடுகிறார்.’

இதை கேட்டதும் சுவாரசியமாக இருக்கிறது என சொல்லி முழு கதையும் கேட்டேன். ஆனால் பிரண்டு ஃபிகராக மாறுவது எப்படி ? பின் விளைவு என்ன? என்பது குறித்தும் விளக்கமளித்தார். நான் சீரியஸாக கதைகளை கேட்டு உணர்வு பூர்வமாக நடித்து வருபவன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு இயக்குநரிடம் இப்போது எடுக்க போகும் காட்சி என்ன? இதற்கு முன் காட்சி என்ன? நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்க வேண்டும்? என கேட்டேன். அப்போது இயக்குநர், ‘ரொம்ப யோசிக்காதீங்க’ என்றார்.

அதற்குப் பிறகு எனக்கு புரிந்து விட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து சுற்றுலா செல்வது போல் ஜாலியாக இருக்க வேண்டும் என சொன்னதும் ,அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிக்கத் தொடங்கி விட்டேன். சக கலைஞர்களுடன் ரசிகர்களை எப்படி சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்து நடித்தோம். ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்கிறோம்.

எங்களுடைய சந்தோஷம் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம். நடிகர் நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஜாலியாகவும் அதே சமயத்தில் கஷ்டப்பட்டும் உழைத்திருக்கிறோம். தயாரிப்பாளர் தமிழில் முதல் படத்தை தயாரிக்கிறார். படத்திற்கான பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்திருக்கிறார்.

இந்த ‘பாட்னர்’ படத்தை குழந்தைகளுடன் திரையரங்குகளுக்கு சென்று, பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே சந்தோஷமாக பார்க்க வேண்டிய படம். ரொம்ப யோசிக்காமல் படம் பார்த்தீர்கள் என்றால்.. படம் நிச்சயம் பிடிக்கும். கதை, திரைக்கதை என ஆழமாக சென்று பார்த்தால் எதுவும் இல்லை. அதற்கான படம் இது இல்லை. சந்தோசமாகவும்.. மனக்கவலைக்கு மருந்தாகவும் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்”.

நடிகை ஹன்சிகா பேசுகையில்,

”எல்லோருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் காமெடி இருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமாக பணியாற்றினோம். இந்த படத்தில் நீங்கள் வித்தியாசமான ஹன்சிகாவை காணலாம். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை புரிந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *