அபிநவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வினித் ஸ்ரீநிவாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் முகுந்தன் உன்னி அசோசீயேட்ஸ்.
மலையாள மொழியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், ஆங்கில வசன வரிகளோடு தமிழகத்தில் வெளியாகியிருக்கிறது.
கதைப்படி,
நாயகன் முகுந்தன் உன்னி வக்கீலாக வருகிறார். வழக்கு எதுவும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்க வருடங்களும் ஓடிக் கொண்டிருக்கிறது.
அச்சமயத்தில், விபத்து காப்பீடு திட்டத்தில் மோசடி செய்து லட்சக்கணக்கில் வக்கீல் ஒருவர் சம்பாதிப்பதை நேரில் காண்கிறார் முகுந்தன்.
அதே மோசடியை தானும் செய்ய களத்தில் இறங்குகிறார் முகுந்தன். அதற்காக அவர் செய்யும் தில்லாலங்கடி வேலைகளே படத்தின் மீதிக் கதை.
படத்தின் டைட்டில் கார்டில் ஆரம்பித்து எண்ட் கார்டு வரை நகைச்சுவையால் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
அதிலும் முகுந்தன் உன்னி கதாபாத்திரத்தில் நடித்திருந்த வினித் ஸ்ரீநிவாசன் கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார். அதிலும், அவர் மைண்ட் வாய்ஸ் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
தான் செய்யும் மோசடி வேலைக்காக எந்த அளவு வரையிலும் இறங்கி செய்யக்கூடிய நபராக வரும் முகுந்தன் உன்னி, அதற்காக அவர் படும் அவமானங்களையும் இயக்குனர் காட்டாமல் இருக்கவில்லை.
படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டர்களும் தனக்கான பணிகளை சிறப்பாக செய்து முடித்து அசத்தியிருக்கிறார்கள்.
வசனங்கள், திரைக்கதை என இரண்டையும் ஒருசேர வைத்து பயணிக்க வைத்து நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் அபினவ் சுந்தர்.
சிபி மேத்யூ அலெக்ஸ் இசையில் பின்னணி இசை கதையோடு பயணிக்க வைத்திருக்கிறது.
விஸ்வஜித்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பலம் என்றே கூறலாம். இப்படியும் கூட நடக்குமா என்று எழும் கேள்விக்கு இப்படியும் நடக்கிறது என்று அழுத்தமாக கூறி சென்றிருக்கிறார் இயக்குனர்.
தான் வெற்றியடைய கொலை செய்யும் அளவிற்கு ஹீரோ சென்றது தான் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.