பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், ராஜ் குமார், அங்கித் நடிப்பில். அறிமுக இயக்குனர் M.சக்திவேல் எழுதி இயக்கியுள்ள படம் “மிரள்”. இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.
கதைப்படி,
முதல் காட்சியிலேயே கனவில் வரும் சில சம்பவங்களை கண்டு பயப்படுகிறார் வாணி போஜன். அதில், யாரோ பரத்தை கொலை செய்கின்றனர். அடுத்த காட்சியில் கண்ணாடியில் எதையோ பார்த்து பயப்படுகிறார்.
பின்னர், பரத்தும் யாரிடமோ “வீட்டையும் மாற்றிவிட்டேன். ஆனாலும் பிரச்சனை குறையவில்லை” என்கிறார். சரி, இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காண ஊரிலுள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட பரத் மற்றும் வாணி அவர்களின் மகன் அங்கித்துடன் செல்கின்றனர். அவர்களுடன் ராஜ்குமாரும் குடும்பத்தின் செல்கிறார்.
ஊருக்கு சென்று வருகின்ற வழியில், வாணி போஜன் கனவு கண்டது போல் முகமூடி அணிந்த ஒருவர் இவர்களை தாக்குகிறார். அவர்களை தாக்கியது யார்? கண்ணாடியை கண்டு வாணி போஜன் ஏன் பயப்படுகிறார்? கனவுக்கும் நிஜத்தில் நடக்கும் சம்பவத்துக்கும் என்ன தொடர்பு? என்பது படத்தின் மீதிக்கதை…
காளிதாஸ் படத்திற்குப் பிறகு பரத்துக்கு கிடைத்த நல்ல திரில்லர் கதை இது. சிறப்பான கதையை தேர்வு செய்தது மட்டுமின்றி அதில் சிறப்பான நடிப்பை தந்து கதையின் வலுவை கூறியிருக்கிறார்.
மற்ற படங்களை விட வாணி போஜனுக்கு இப்படத்தில் ஸ்கொர்/ஸ்கோப் அதிகம். அவரை மையமாக வைத்து நடக்கின்ற ஒரு கதைக்களம் இது. எமோஷன்,கோவம்,காதல்,பாசம் என அனைத்து எக்ஸ்பிரேஷனையும் நேர்த்தியாக தந்துள்ளார்.
ராஜ் குமாருக்கு ஒரு வலுவான பாத்திரம் இப்படத்தில். அவர் கேரியரில் முக்கியமான படம் இது.
படத்தை இறுதி வரை தாங்கிப்பிடித்து இசை மட்டுமே. பிரசாத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அதே போல், த்ரில்லர் படத்தில் இசை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஒளிப்பதிவும் முக்கியம். அந்த வகையில் நம்மையே திரையில் பயணிக்க வைத்துள்ளார் சுரேஷ் பாலா. கலைவாணனின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.
ஸ்டண்ட் காட்சிகளில் “டேன்ஜர் மணி” யதார்த்த சண்டைக்காட்சிகளை இயக்கியிருக்கிறார்.
முதல் படத்தில் த்ரில்லர் கதையை தேர்வு செய்த சக்திவேலுக்கு வாழ்த்துக்கள். அதிகபட்சம் ஒரு ரூம், ஒரு வீடு, அல்லது ஒரு பங்களா இவற்றுக்குள் மட்டுமே திகில் கதைகளை இயக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து திறந்த வெளியிலும் திகில் காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளார். முதல் பாதியிலே கதையை மேலோட்டமாக சொல்லியிருந்தால் படம் கூடுதல் சுவாரஸ்யம் இருந்திருக்கும். அதே போல் திரைக்கதையிலும் சிறு கவனம் தேவை.
வழக்கம் போல், ஆக்சிஸ் பிலிம் பேக்டரி மற்றும் சக்தி பிலிம் பேக்டரியிலிருந்து மக்களை எண்டர்டெய்ன் செய்ய வெளியாகியுள்ள நேர்த்தியான திகில் த்ரில்லர் “மிரள்”.
மிரள் – மிரளவைக்கும்