‘மாயநதி’ – திரை விமர்சனம்

காதல் என்றால் என்னவென்று புரியாதவர்கள் காதலித்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதே மாயநதி படத்தின் மையக் கரு.

‘ஆடுகளம்’ நரேனின் ஒரே மகளான வெண்பா பிறக்கும் போதே தாயை இழக்கிறார். இதுபோன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. ஆகையால், தான் ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்ற அப்பாவின் கனவை நனவாக்கும் லட்சியத்தோடு 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பள்ளிக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செல்லும் ஆட்டோ ஓட்டுநர் அபிசரவணன். இவர் 10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர். ஒரு கட்டத்தில் வெண்பாவிற்கு அபிசரவணன் மீது காதல் வருகிறது. இருவரும் காதலிக்க தொடங்கும் போது வெண்பாவின் அப்பாவிற்கு தெரிய வருகிறது.

வெண்பாவிற்கு பொறுப்புமிக்க அப்பாவாக அறிவுரை கூறுகிறார் ‘ஆடுகளம்’ நரேன். வெண்பா அப்பாவின் அறிவுரையை ஏற்றாரா? மருத்துவ கனவை நனவாகினாரா? அபிசரவணன் ‘ஆடுகளம்’ நரேனின் எதிர்ப்பிற்கு என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

அபி சரவணன் படிப்பில் வெறும் தேர்ச்சி மட்டுமே பெற்றிருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.

வெண்பா சிறந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அவர் நடிப்பு சுயநலவாதி. அவர் திரையில் தோன்றும் காட்சிகளில் அவரைத் தவிர மற்றவர்களின் பக்கம் கவனத்தை செலுத்த விடமாட்டார். அப்பாவுக்கு பிடித்த பெண்ணாக அனைவரின் மனதையும் தொடுகிறார். பருவ வயதில் ஏற்படும் காதல் தடுமாற்றத்தால் அவர் எடுக்கும் முடிவில் அனைவரின் பரிதாபத்திற்கு ஆளாகிறார்.

‘ஆடுகளம்’ நரேன் வழக்கம்போல் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் மகள் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் பதட்டப்படாமல் கூறும் அறிவுரையில், இப்படி ஒரு அப்பா நமக்கும் கிடைக்க மாட்டாரா? என்று பெண் குழந்தைகளை ஏங்க வைக்கிறார்.

அப்புக்குட்டி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். கார்த்திக் ராஜாவின் நடிப்பில் ஆர்வம் தெரிகிறது.

இயக்குனர் நல்ல கருத்தை கூற முயற்சி செய்திருக்கிறார். ‘இந்த உலகத்தில் முக்கால்வாசி பேர் நல்லவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் நமக்கு பொருத்தமாக இருப்பார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.’ என்ற வசனம் மகளிடம் நண்பர் போல பழகும் அப்பா இதைவிட சிறப்பாக அறிவுரை கூற முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பவதாரிணி இசை படத்திற்கு மெருகு சேர்த்திருக்கிறது.

மாயநதி – நீரோட்டத்தில் ஆழம் குறைவு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *