நடிகர்கள்: விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன்,
இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்
இசை: ஜி வி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம்
கதை நகர்வு 1975 காலகட்டத்தில் செல்கிறது. டைம் ட்ராவலர் டெலிபோன் ஒன்றை பிரபல ஆராய்ச்சியாளரான செல்வராகவன் கண்டுபிடிக்கிறார். சிறிது நேரத்திலேயே கேங்க்ஸ்டர் உடனான மோதலில் செல்வராகவன் இறந்துவிடுகிறார்.
1975 -லிருந்து காலங்கள் உருண்டோடி 1995 காலகட்டத்திற்கு கதை செல்கிறது. அவரின் மகன் விஷால் மார்க் எனும் பெயரில், மெக்கானிக்காக வருகிறார். அதே பகுதியில் மிகப்பெரும் கேங்க்ஸ்டர் தலைவனாக வருகிறார் அப்பா எஸ் ஜே சூர்யா(ஜாக்கி). இவருக்கு மகனாக எஸ் ஜே சூர்யா (மதன்) வருகிறார். எஸ் ஜே சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
20 வருடத்திற்கு முன்பு கேங்க்ஸ்டராக இருந்த அப்பா ஆண்டனி(அப்பா விஷால்) மாதிரி ஆகிவிடக் கூடாது என்று நினைக்கிறார் மார்க். ஆம், இரண்டு விஷாலும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
அப்பா மீது தவறான அபிப்ராயம் வைத்திருக்கிறார் மகன் விஷாலான மார்க். இந்நிலையில் தான் 20 வருடத்திற்கு முந்தைய டைம் ட்ராவ்லர் டெலிபோன் மார்க்கிடம் சிக்குகிறது.
அதை வைத்து தனது இறந்த காலத்தில் நடந்தவற்றை அறிந்து கொள்ள முற்படுகிறார். 1975ல் என்ன நடந்தது.? தனது தந்தையான ஆண்டனி என்ன செய்து கொண்டிருந்தார்.? என்ற கேள்விக்கெல்லாம் விடையைக் கண்டுபிடிக்கிறார் மார்க்.
6 அடி காத்தே என்ற பாடல் விஷாலுக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறது. நடிப்பு, ஆக்ஷன் என அனைத்து ஏரியாவிலும் அதகளமாய் அடித்து நொறுக்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு சக்கத்தான ட்ரீட் வைத்து அவர்களின் எனர்ஜிக்கு கூடுதலாக பூஸ்ட்டும் கொடுத்திருக்கிறார் விஷால்.
விஷால் இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும், இப்படத்திற்காக சற்று அதிகமாகவே உழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது. அப்பா மற்றும் மகன் என இரண்டு பாத்திரங்களையும் பக்காவாக செய்திருக்கிறார். அப்பா விஷாலுக்கு ஓவராக மாஸ் வைத்து அதிரடி காட்டியிருக்கிறார்கள்.
எப்போதும் தனக்கென ஒரு தனி ஸ்டைலை கொடுத்து வரும் எஸ் ஜே சூர்யா, இப்படத்திலும் அதையே கொடுத்து அசத்தியிருக்கிறார். வாட் ஏ மேன் என்று சொல்லும் அளவிற்கு மாஸ் லெவலும் ஏற்றி ஏற்றி கொடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் அப்பா & மகன் எஸ் ஜே சூர்யாவிற்குள் நடக்கும் அதகள போட்டி திரையரங்கை அதிர வைத்திருக்கிறது.
புஷ்பா, ஜெயிலர், மாவீரன் என தொடர்ந்து தனது நடிப்பின் திறமையை கொடுத்து வரும் சுனில் இப்படத்திலும் வேற லெவலில் தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷின் இசை மாஸ் ஓவர் லோட்டடாக இருந்தது படத்திற்கு பெரும் பலம். அதிலும், அதிருதா பாடலும், பஞ்சு மிட்டாய் ரீமேக் பாடலும் ஆட்டம் போட வைத்திருக்கிறது.
முதல் பாதி நமக்கு சலிப்பைக் கொடுத்தாலும், இரண்டாம் பாதி மருந்து போட்டு சபாஷ் போட வைக்கிறது. திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருந்தால் பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல வைத்திருப்பார் ஆதிக் ரவிச்சந்திரன்.
மார்க் ஆண்டனி – சும்மா அதிருதில்ல…..