மாவீரன் விமர்சனம் – (4/5);

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மோனிஷா, சரிதா, மிஸ்கின், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “மாவீரன்”.

கதைப்படி,

சிவகார்த்திகேயன் தன் அம்மா மற்றும் தங்கையுடன் குப்பத்தில் வசித்து வருகிறார். மிகவும் பயந்த சுபாவம் கொண்ட சிவகார்த்திகேயன் ஓவிய கலைஞராக இருக்கிறார்.

ஒருநாள் இவர்கள் வசித்து வரும் குப்பத்தை காலி செய்து தரும்படி அரசாங்கத்திடம் இருந்து நோட்டீஸ் வருகிறது. குப்பத்தை காலி செய்த மக்கள் குடிசை மாற்று வாரியம் கொடுத்துள்ள ஹவுசிங் போர்டு வீட்டிற்கு மனசே இல்லாமல் செல்கிறார்கள்.

அங்கு போய் பார்த்தால் அந்த ஹவுசிங் போர்டு வீடு குப்பத்து மக்களுக்கு சொர்க்கமாக மாறிவிடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் இந்த வீடு தரமில்லாததை உணர்ந்த சிவகார்த்திகேயன் இதன் மூலம் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது ஒரு குரல் கேட்கிறது.

அந்த குரல் சிவகார்த்திகேயன் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போடுகிறது. இறுதியில், சிவகார்த்திகேயன் பிரச்சினைகளை சரி செய்தாரா? அந்த குரல் யாருடையது? அந்த குரலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் தன் நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். கோழையாக இருக்கும் ஒருவர் மாவீரனாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக்காட்சியில் காமெடி கலந்த ஆக்‌ஷனை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார் சிவ கார்த்திகேயன்.

கதாநாயகியான அதிதி சங்கர் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். யோகிபாபு தன் நகைச்சுவையினால் அதகளம் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன், யோகிபாபு காமெடி ஒவ்வொன்றும் திரையரங்குகளில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரமான விஜய் சேதுபதி தன் குரல் மூலம் மொத்த படத்தையும் முன்னோக்கி எடுத்துச்செல்கிறார்.

வில்லனான மிஷ்கின் காமெடி கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தெலுங்கு நடிகர் சுனில் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.

ஒரு வித்தியாசமான கதையை காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக விறுவிறுப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின்.

கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கியுள்ளார். இரண்டாம் பாகத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் இருந்தாலும் திரைக்கதையை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் அமைத்து பாராட்டுகளை பெறுகிறார் இயக்குனர்.

பரத் சங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

ஒளிப்பதிவின் மூலம் காட்சிகளை ரசிக்கும்படி அமைத்துள்ளார் விது அய்யனா.

மாவீரன் – மக்களுக்கான அரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *