பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் காலமானார்.
மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்’ பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 70 ஆண்டுகள் இசை பயணத்தில் பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் இன்று (06/02/2022) காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படப்பாடல்களை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். தமிழில் சத்யா படத்தில் “வளையோசை கலகலவென.” என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.
விருதுகள்:
1)லதா மங்கேஷ்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டிருந்தது.
2)1989ஆம் ஆண்டு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் லதா மங்கேஷ்கர் பெற்றிருந்தார்.
3)1969ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது.
4)1999ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது.
மற்றும் பல இசை விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
1999 நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் லதா மங்கேஷ்கர் பதவி வகித்துள்ளார்.