‘கடைசி விவசாயி’ திரைவிமர்சனம் – (4/5)

டிரைபல் ஆர்ட்ஸ் தயாரிப்பில், விஜய்சேதுபதி, நல்லாண்டி, ரேச்சல் ரெபேக்கா, யோகிபாபு நடிப்பில், ம.மணிகண்டன் இயக்கத்தில், ஒளிப்பதிவில், விஜய் சேதுபதி வழங்கும் படம் ‘கடைசி விவசாயி’.

உசிலம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் பல வருடங்களாக இருக்கும் அரசமரம் ஒன்றில் இடி விழுந்து எரிய, ஊர்மக்கள் அது தெய்வ குத்தம் அதனால் நாம் அனைவரும் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்று கூட்டம் கூட்டி ஆலோசனை செய்து முடிவு எடுக்கின்றனர்.

பின்பு, ஊரில் உள்ள அனைவரும் தண்ணீர் பஞ்சம் காரணமாக விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைகள் செய்து கொண்டிருக்க நல்லாண்டி மட்டும் தன் பூர்விக நிலத்தை விற்காமல் வைத்திருக்கிறார்.

எனவே, அவரிடம் கோவிலுக்காக நெல் அறுவடை செய்துதருமாறு ஊர்க்காரர்கள் கேட்க்க அவரும் விவசாயத்தை ஆரம்பிக்கிறார். அவரின் வயலில் ஒருநாள் 3 மயில்கள் இறந்து கிடக்கும் வேளையில், அவரும் அந்த மயில்களை தன் தோட்டத்தில் புதைத்து விடுகிறார்.

பின்பு இது காவல்துறையால் கண்டறியப்பட்டு வழக்கு போடப்படுகிறது. நீதிமன்றத்தில் மயிலை புதைத்ததற்காக 15 நாட்கள் சிறைக் காவலில் வைக்கும்படி தண்டனை வழங்குகின்றனர். அதனால் அவரின் வயல், மாடு, கோழி என எதையும் பார்த்துக் கொள்ள ஆட்கள் யாரும் இல்லை.

விவசாயம் நடந்ததா? நெல் அறுவடை செய்யப்பட்டதா? அங்கிருக்கும் மற்ற உயிர்கள் என்ன ஆனது? கோவில் திருவிழா நடந்ததா? என்பது மீதி கதை…

முதல் காட்சியில் இயற்கையின் அழகை காண்பித்தது மட்டுமல்லாமல், படத்தின் இறுதி வரை அதை காட்சிப்படுத்தியது அற்புதம்.

வசனங்கள் படத்திற்கு முக்கியபலம், ஒரு சில வசனங்கள் கண்கலங்க செய்யும். மெதுவான பாதையில் கதை நகர்ந்தாலும் இந்த கதைக்கு அது தேவையே.

விஜய் சேதுபதி ஒரு சில காட்சிகள் வந்தாலும், தனது வசனங்களின் மூலம் சொல்ல வேண்டிய கருத்துகளை சொல்லி விடுகிறார்.

நல்லாண்டி ஒரு விவசாயியின் வலியையும், வாழ்க்கையையும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரேச்சல் ரெபேக்கா தனது கதாபாத்திரத்தின் மூலம் படத்தின் இரண்டாம் பாதியை தாங்கிப் பிடித்திருக்கிறார். அவரின் நடிப்பும் அற்புதம்.

உடன் வந்த அனைத்து நடிகர்களும் நேர்த்தியாக தனது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள்.

ம.மணிகண்டன் வசனத்தில், இயக்கத்தில், ஒளிப்பதிவில் அனைவரையும் வியப்படைய வைத்திருக்கிறார்.

கிராமம் சார்ந்த படங்களுக்கு இசை என்றால் சந்தோஷ் நாராயணன் தான் என்று இந்த படத்திலும் நிரூபித்து விட்டார். இவருடன் இணைந்து இசையமைத்திருக்கும் ரிச்சார்ட் ஹார்வி கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

விவசாயம் மற்றும் விவசாயியின் வலியை உணர்த்தும் படமாகவும், இயற்கையின் அழகை காட்டும் படமாகவும் இருக்கிறது ‘கடைசி விவசாயி’.

கடைசி விவசாயி – விவசாயம் அப்போது ‘கலை’ தற்போது ‘கவலை’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *