கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியீடு;

கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் கவிக்கோ மன்றம் இணைந்து சென்னையில் இன்று (டிசம்பர் 24) மாலை நடத்திய விழாவில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

மயிலாப்பூர் சி ஐ டி காலனி இரண்டாவது பிரதான சாலையில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற கருத்தை கவரும் நிகழ்ச்சியில் ஆவணப்படத்தை பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே. பாட்சா பெற்றுக்கொண்டார்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் வாழ்க்கையையும் தமிழ்ப் பணியையும் சிறப்பாக பதிவு செய்யும் வகையில் ஆவணப்படத்தை இயக்குநர் பிருந்தா சாரதி உருவாக்கி இருந்தார். சிங்கப்பூர் முஸ்தபா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, சி ஜே ராஜ்குமார் ஒளிப்பதிவை கவனிக்க சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டிருந்தார்.

தமிழியக்க தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான முனைவர் கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற கவிக்கோ ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை செயலாளர் அ.அயாஸ் பாஷா வரவேற்புரை வழங்கிட கவிஞர்களின் கவிஞர் என்ற தலைப்பில் எஸ் ஐ ஈ டி கல்லூரி பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா சிறப்புரை ஆற்றினார். பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *