ஸ்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் அறம் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் “காலங்களில் அவள் வசந்தம்”. ஹரி எஸ் ஆர் இசையமைக்க ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியிருக்கிறார். கௌஷிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி, மேத்திவ் வர்கீஸ், லொள்ளுசபா சாமிநாதன், RJ விக்னேஷிகாந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் விமர்சனம் இதோ உங்கள் பார்வைக்கு…
கதைப்படி,
சினிமா காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை நிஜ வாழ்க்கையில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் நாயகன் ஷாமுக்கு (கௌசிக்), அதற்கு எதிர்மறையாக யதார்த்த வாழ்க்கையையும் காதலையும் விரும்பும் ராதே(அஞ்சலி) மனைவியாகிறார். திருமணமான புதிதில் இவர்களின் வாழ்க்கை அழகாக நகர்கிறது.
ஒரு நாள் ராதேவுக்கு ஷாமின் டைரி கிடைக்க, அவரின் முன்னாள் காதலிகளின் பட்டியலையும் சினிமாத்தனமான காதலையும் அறிந்து கொள்கிறார் ராதே. இதன் பின் இவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் வருகிறது. ராதே விரும்பும் யதார்த்த கணவனாக மாறினாரா ஷாம்? இல்லை இவர்கள் இருவரும் பிரிந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை.
இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் படத்தின் முதல் காட்சியிலேயே ஈர்க்கும் அவருக்கு தனி பாராட்டுகளும் வாழ்த்துக்களும். நிச்சயம் இவருக்கு சினிமாவில் பெரிய இடம் காத்திருக்கிறது.
கதைக்களம் மற்றும் திரைக்கதை நம்மையும் ஒருவராக காட்சிக்குள்ளே கொண்டு செல்லும் ஃபீல் குட் படத்தை இயக்கியுள்ளார் ராகவ். படத்தின் தலைப்பிற்கேற்ப “வசந்த காலம்”, “இலையுதிர் காலம்” போன்று பல காலங்களை குறிப்பிட்டு திரைக்கதையமைத்தது காதல் கதைக்கு புதுமை. வசனங்களும் அற்புதம்.
கண்கவர் காட்சியமைப்புகளை கொடுத்த கோபியின் ஒளிப்பதிவு ரசனைக்கு விருந்து.
“ராதே ஷ்யாம்” என்ற பெயர்
இந்த படத்திற்கு தான் பொருத்தமாக இருக்கும். ஆனால், “காலங்களில் அவள் வசந்தம்” சிறந்த தலைப்பு. க்ளைமாக்ஸ் காட்சிகள் கதையை போல் யதார்த்தமாக இருந்திருந்தால் அனைத்து காலங்களையும் ஒரு சேர ரசிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கும்.
இது எனது முதல் படம் என்று கௌசிக் ராம் தானே முன் வந்து கூறினால் தான் தெரியும். அந்தளவிற்கு யதார்த்தமாக நடித்திருக்கிறார். அசத்தல் அறிமுக நாயகனுக்கு சிகப்பு கம்பள வரவேற்புகள்.
அஞ்சலி நாயர் படத்திற்கு படம் தனது திறமையை நிரூபித்து வருகிறார். RJ விக்னேஷின் அளவான நடிப்பும், அழுத்தமான வசனமும் படத்திற்கு பலம்.
காலங்களில் அவள் வசந்தம் – காதலின் வசந்தம்