கவனிக்க வேண்டிய பாடம்… கன்னி மாடம் விமர்சனம் 4/5

கதை என்ன..?

ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்க்கை… ஜாதி மாறிய காதல் திருமணம்… ஆணவக் கொலை… இந்த மூன்றையும் கலந்து காவியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.

சென்னையில் உள்ள தந்தை பெரியார் ஆட்டோ ஸ்டாண்டில்.. ஆட்டோ டிரைவர் ஸ்ரீராம். இவரின் நண்பர் ஆடுகளம் முருகதாஸ்.

இவர்கள் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் பெண்மணி வலீனா ஸ்ரீராமை ஒரு தலையாக காதலிக்கிறார்.

ஸ்ரீராமின் தந்தை ஜெயிலில் இருப்பதால் தன் அம்மா நிலையை நினைத்து தினமும் சோகத்தில் இருக்கிறார் ஸ்ரீராம்.

ஒரு நாள் மதுரையில் இருந்து ஊரை விட்டு ஓடி வரும் காதல் தம்பதிகள் (விஷ்னு மற்றும் காயத்ரி) ஸ்ரீராமின் வீட்டருகே குடியேறுகின்றனர்.

அவர்களின் நிலையறிந்து அவர்களுக்கு நிறைய உதவிகளை செய்கிறார் ஸ்ரீராம்.

ஒரு கட்டத்தில் காயத்ரி தனியாக வசிக்க வேண்டிய சூழ்நிலை.

அதன்பின்னர் என்ன செய்தார் ஸ்ரீராம்.? அவரின் காதல் என்ன ஆனது? காயத்ரி (படத்தில் மலர்) நிலை என்னானது? ஸ்ரீராமின் தந்தை ஜெயிலில் இருக்க என்ன காரணம்..? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடித்தவர்கள் எப்படி..?

ஸ்ரீராம், காயத்ரி, விஷ்ணு இவர்கள் மூவரும் சினிமாவுக்கு புதுமுகம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகாக இயக்குனரை சொன்னதை உணர்வுபூர்வமாக நடித்து வாழ்ந்திருக்கிறார்கள்.

காயத்ரிக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. கிராமத்து பெண்ணாக தவிக்கும் காட்சிகளில் நம் கண்களை தாண்டி மனதில் நுழைகிறார்.

தாடியை மீறி ஸ்ரீராமின் கண்களில் காதல், கருணை பளிச்சிடுகிறது. விஷ்ணு இடைவேளை வரை வந்தாலும் இவரின் கேரக்டர் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆடுகளம் முருகதாஸ், ஹவுஸ் ஓனர் (ரோபா சங்கர் மனைவி ப்ரியா) இருவரும் வரும் காட்சிகள் செம.

உங்கள கட்டிக்கிட்ட தியாகி யாருக்கா..? என்ன ஒரு 20 வருசம் வாயும் வயிறுமா இருப்பீங்களா? என அவரின் உடல் எடையை கிண்டல் செய்யும்போது நிச்சயம் ரசிகர்களின் கைத்தட்டல்கள் கிடைக்கும்.

நடிகராக சான்ஸ் தேடி அலையும் சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீராமின் அப்பா கஜராஜ் ஆகியோரும் நல்ல தேர்வு. ஒருவர் சீரியஸ் என்றால் மற்றொருவர் சிரிப்பு வெடி.

காயத்ரிக்கு காக்கா வலிப்பு வரும்போது சூப்பர் குட் சுப்ரமணி பேசும் வசனங்கள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

ஆட்டோ ஸ்டாண்டில் வரும் நபர்கள் அனைவரும் அருமை. அதிலும் ஆட்டோ ஓட்டும் ஸ்டெல்லா செம அழகு. துடிப்பு. ஆட்டோ பெண் டிரைவருக்கு வரும் சங்கடங்களை ஒரே வார்த்தையில் சொல்லி ஆண்களை ஓங்கி அடித்திருக்கிறார்.

தாய் மாமன், வீடு புரோக்கர், என ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

ஹரிஷ் சாய் இசையில் 3 காலு வாகனம் பாடல் இனி ஆட்டோ டிரைவர்களின் பேவரைட் பாடலாக இருக்கும். மற்ற பாடல்கள் ஓகே ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு கை கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவாளர் இனியனை காட்சிகளை செதுக்கியுள்ளார்.

விஷ்ணு & காயத்ரி படுத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கை பற்றி பேசும்போது இவரின் கேமராவும் பேசி இருக்கிறது. அந்த காட்சியை கவிதையாக்கி இருக்கிறார்.

க்ளைமாக்ஸில் ஓடும் ரத்தம் அதில் தெரியும் காயத்ரியின் முகம் என ஒவ்வொரு ப்ரேமையும் அருமையாக படம் பிடித்துள்ளார்.

ரிஷல் ஜெய்னி எடிட்டிங் செய்துள்ளார். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டூ இருக்கலாம்.

இதுநாள் வரை நடிகராக வலம் வந்த போஸ் வெங்கட் இப்படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்.

கன்னி முயற்சி போஸ் வெங்கட்டுக்கு வெற்றி கனியை கொடுத்துள்ளது.

க்ளைமாக்சில் உள்ள ஒரு காட்சி மைனா படத்தை நினைவுப்படுத்தினாலும் அந்த மைனா பெற்ற வெற்றியை இந்த படமும் பெறும். போஸ் வெங்கட்டுக்கு மிகப்பெரிய சபாஷ் போடலாம்.

இடைவேளை காட்சியும் சரி க்ளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும்.

ஜாதி வெறியர்களுக்கும் ஆணவக் கொலைகளுக்கு மரண அடி கொடுத்துள்ளார். இனியாவது இது போன்றவர்கள் திருந்த வேண்டும்.

ஆக மொத்தம்.. கன்னி மாடம்.. கவனிக்க வேண்டிய பாடம்.

Kanni Maadam review and rating

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *