காரி விமர்சனம் – (3.25/5)

சசிகுமார், பார்வதி அருண், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, “ஆடுகளம்” நரேன் மற்றும் பலர் நடிப்பில், ஹேமந்த் குமார் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் “காரி”. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கதைப்படி,

காரியூர் என்ற கிராமத்தை குப்பைக்கிடங்காக மாற்ற அரசு முடிவு செய்கிறது. மேலும், காரியூருக்கும் சிவனேந்தல் என்ற ஊருக்கும் பகை இருந்துவர. கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என பஞ்சாயத்து கூட்டப்படுகிறது.

அந்தப் பஞ்சாயத்தில், திருவிழாவை தலைமை தாங்குவது யார் என முடிவு செய்வதில் பிரச்சனை வர. ஜல்லிக்கட்டில் ஜெயிக்கும் ஊருக்கு திருவிழாவை தலைமை தாங்கும் உரிமை தரப்படும் என முடிவு செய்கிறார்கள்.

சிவனேந்தல் கிராமத்தில் 18 காளைகளை வாடியில் இறக்க 18 குடும்பங்கள் உள்ளது. ஆனால், காரியூரில் 17 குடும்பங்கள் மட்டுமேயுள்ள நிலையில். சென்னையிலுள்ள சசிகுமார் குடும்பத்தை தேடி ஊரிலிருந்து சிலர் வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, யாருக்கும் அடங்காத காளை மாடுகளை தேடி சாப்பிடும் ஜெ.டி.சக்கரவர்த்தி. சிவனேந்தலிலுள்ள சிறந்த காளையை தேடி வருகிறார்.

சசிகுமார் குடும்பத்தை கண்டுபிடித்தார்களா? காளைக்கு என்ன ஆனது? குப்பைக்கிடங்கு திட்டம் என்ன ஆனது? என்பது மீதிக்கதை…

முதல் பாதியில் வரும் சிட்டி பையன் பாத்திரம் சசிகுமாருக்கு சரியான பாத்திரமில்லை. அதற்கு மாறாக, கிராமத்து இளைஞனாக, செண்டிமெண்ட் ஹீரோவாக வளம் வரும் இரண்டாம் பாதியே சசிகுமாரின் பாணி. வழக்கம் போல், சிறந்த நடிப்பு தான்.

மலையாளப் படங்களில் நடித்து வந்த பார்வதி அருண், தமிழில் கால்பதித்திருக்கிறார். அடடா, அசூர நடிப்பு. இப்போது அறிமுகமாகும் நடிகைகள் கிளாமரை வைத்து மட்டுமே காலத்தை ஓட்ட. நடிப்பை வைத்து ஒரு வளம் வரப்போகிறார் பார்வதி. குறிப்பாக, இடைவேளைக்கு முன் வரும் ஒரு காட்சி, அத்தனை நேர்த்தி.

யதார்த்தமாக இருந்தாலே, ஆடுகளம் நரேன் நன்றாக இருப்பார். அவருக்கு ஏன் நரைத்த விக்கும், ஒட்டு மீசையும்.

படத்திற்கு தேவையில்லாத செட் ப்ரபர்ட்டியாக நின்று செல்கிறார் அம்மு அபிராமி.

கார்ப்பரேட் அநியாயம், பாரம்பரிய ஜல்லிக்கட்டு, அப்பா செண்டிமெண்ட், அரசு திட்டம் என ஒரே படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஹேமந்த். பல விஷயங்கள் இருந்ததால், கோர்வையாக கையாள முடியாமல் தடுமாறியது திரைக்கதையில் தெரிந்தது. ஆனால், எது எப்படியோ சொல்ல வந்ததை கட்சிதமாக சொல்லிவிட்டார்.

இமானின் இசை ஓகே ராகம்.

படத்தை முழுவதும் தாங்கிப்பிடித்தது இவர் ஒருவர் தான். பி.சி.ஸ்ரீராம், ரவி வர்மன், சந்தோஷ் சிவன் வரிசையில் இந்திய சினிமாவில் பெரும் உச்சத்தை தொட காத்திருக்கும் கணேஷ் சந்திரா. யப்பப்பா, இது வரை கிராமத்திற்கு சென்றதே இல்லையா? கிராமத்தின் அழகை பார்க்க வேண்டுமா? அதற்கு சரியான தேர்வு காரி. அவ்வளவு அழகான ஒளிப்பதிவு. வாடியிலிருந்து வரும் காளையை இப்படியும் காட்சிப்படுத்த முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கணேஷ்.

காரி – காளையின் ராஜ்யம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *