ஜோதி திரைவிமர்சனம் – (4/5)

SPR ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா சேதுபதி தயாரிப்பில் வெற்றி, ஷீலா, க்ரிஷா க்ரூப் மற்றும் ராஜா சேதுபதி நடிப்பில் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஜோதி.

கதைப்படி,

ராட்சசன் பட புகழ் சரவணன் மற்றும் ஷீலா இருவரும் கணவன் மனைவி. ஷீலா நிறைமாத கர்ப்பிணியாகவும். சரவணன் மருத்துவராகவும் நடித்துள்ளனர். இன்னும் 4 நாட்களில் குழந்தை பிறக்கும் தருவாயில், அன்று இரவு சரவணனுக்கு அவசர அழைப்பு வர, வெளியூர் சென்று விடுகிறார்.

இந்த சூழ்நிலையில், வீட்டிற்குள் புகுந்துவிடும் மர்ம நபர் ஒருவர், ஷீலாவின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திச் சென்று விடுகிறார். மயக்கமுற்ற நிலையில் கிடக்கும் ஷீலாவை ஓடோடி வந்து பார்த்து கதறி அழுகிறார் எதிர்வீட்டில் குடியிருக்கும் க்ரிஷா.

உடனே, அந்த ஏரியாவில் காவலராக பணிபுரியும் தனது கணவர் வெற்றிக்கு போன் செய்து வரவழைத்து ஷீலாவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

குழந்தையை கடத்திய அந்த மர்ம நபர் யார் என்று தீவிர விசாரணையில் இறங்குகிறார் நாயகன் வெற்றி. இறுதியாக குழந்தையை மீட்டனரா.? கடத்திய மர்ம நபர் யார் என்று கண்டுபிடித்தார்களா.? இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக வரும் வெற்றி வழக்கமான நடிப்பில் இருந்து தேறியிருக்கிறார். ஆனாலும் சில காட்சிகளுக்கு இவரின் உடல் மொழியில் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம்.

கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஷீலா இம்முறையும் அவருக்கான பாராட்டுக்களையும் புகழையும் தட்டிச்சென்றுவிட்டார். பிரசவிக்கப்போகும் சில நேரத்திற்கு முன் அவர் ஆடும் பரதம் நம்மை கண்கலங்க வைக்கிறது.

வெற்றிக்கு மனைவியாக நடித்திருக்கும் க்ரிஷா நடித்த காட்சிகள் முழுவதும் ஸ்கோர் செய்துவிட்டார். எமோஷன் காட்சிகளில் நம்மையும் எமோஷனாக்கிவிடுவார்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி. கதையை தாங்கிப்பிடித்து அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் வலு கொண்ட கதாபாத்திரம்.

ஷீலாவின் தங்கையாக நடித்தவர், க்ளைமாக்ஸ் காட்சியில் சண்டைக் காட்சியில் அசத்திய ஹரீஷ், அவரின் தம்பி, உள்ளிட்ட அனைவரும் படத்திற்கு மிகப்பெரும் பலமாகவே நின்றிருக்கின்றனர். படத்தில் ஏட்டு கதாபாத்திரத்தில் நடித்த குமரவேலும் நடிப்பில் கலக்கிவிட்டார்.

ஷீலாவின் தந்தையாக நடித்த மைம் கோபியின் நடிப்பையும் நாம் பெரிதாக பாராட்டலாம். அப்பா – மகளுக்கான பாசத்தை முதல் பாடலிலே காட்டி நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கின்றனர்.

சமூக பொறுப்பும் அக்கறையும் கொண்டு மக்களுக்கான ஒரு கதையை தெர்வு செய்த இயக்குனர்களுக்கு தனி பாராட்டுக்கள்.

2020ம் ஆண்டு இந்தியா முழுவதும் அதிகமாக நடைபெறும் குழந்தை கடத்தலை மையமாக வைத்து இப்படத்தை படக்குழு உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் வருடத்திற்கு சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அதில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கண்டுபிடிக்க முடியாமல் போவதாகவும் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று உள்ளது. பிறந்த குழந்தை காணாமல் போனால், அந்த தாய் படும் வேதனையை இப்படத்தில் காண்பித்தது படத்தின் முக்கிய பலம்.

காட்சிக்கு காட்சி பரபரப்பை ஏற்றியிருக்கிறார் இயக்குனர். யார் குழந்தையை கடத்தியிருப்பார் என்று படம் பார்ப்பவர்களை எந்த இடத்திலும் கண்டுபிடித்துவிடாதபடி, மிகவும் தெளிவாக திரைக்கதை அமைத்து கதையை நகர்த்திருக்கிறார் இயக்குனர்.

ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. சேஷையாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

வரும் ஜூலை 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ஜோதி – விழிப்புணர்வு ப(பா)டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *